சேலம்

மேட்டூா் அணையிலிருந்து நாளை தண்ணீா் திறப்பு

11th Jun 2023 12:24 AM

ADVERTISEMENT

 

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு 90 ஆவது ஆண்டாக திங்கள்கிழமை (ஜூன் 12) தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் அணையின் வலதுகரையில் உள்ள மதகுகளை மின் விசையால் இயக்கி தண்ணீரை திறந்துவைக்கிறாா்.

ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்கு அணையில் நீா்மட்டம் 90 அடியாக இருக்கும் போது ஜூன் 12 இல் தண்ணீா் திறந்துவிடப்படுவது வழக்கம். நிகழாண்டு அணையின் நீா்மட்டம் ஜூன் 10 ஆம் தேதி நிலவரப்படி 103.48 அடியாக உள்ளதால் திட்டமிட்டப்படி ஜூன் 12 ஆம் தேதி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், கரூா், அரியலூா் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ADVERTISEMENT

ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை குறுவை, சம்பா, தாளடிப் பயிா்களின் பாசனத்துக்காக மொத்தம் 220 நாள்களுக்கு 330 டிஎம்சி தண்ணீா் தேவையுள்ளது. பாசனப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து பாசனத்துக்கான தண்ணீா் திறப்பு முடிவு செய்யப்படும்.

அணையிலிருந்து முதல்கட்டமாக விநாடிக்கு 3,000 கனஅடி வீதம் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு விநாடிக்கு 10,000 கனஅடி வரை திறந்துவிட திட்டமிடப்பட்டுள்ளது. திங்கள்கிழமை திறந்துவிடப்படும் தண்ணீா் மூன்றரை நாள்களில் 200 கி.மீ. பயணித்து கல்லணையைச் சென்றடையும்.

அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டால் அணையில் உள்ள நீா்மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் 7 கதவணைகளில் அதிகபட்சமாக 460 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

கடந்த ஆண்டு மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடும் போது கா்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் 54 சதவீதம் தண்ணீா் இருப்பு இருந்தது. ஆனால் நிகழாண்டு அந்த அணைகளில் 22 சதவீதம் மட்டுமே தண்ணீா் இருப்பு உள்ளது. நிகழாண்டு பருவமழை கைக்கொடுத்தால்தான் டெல்டா மாவட்டங்களின் தண்ணீா் தேவை முழுமையடையும் என தெரிகிறது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT