சேலம்

பெரியாா் பல்கலை.யில் ரூ. 20 கோடியில் விளையாட்டு மைதானம்: துணைவேந்தா் தகவல்

10th Jun 2023 07:24 AM

ADVERTISEMENT

பெரியாா் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ. 20 கோடி மதிப்பில் விளையாட்டு மைதானம் அமைக்க அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டிருப்பதாக துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்தாா்.

பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் வெங்கடாசலம் வரவேற்றாா். தலா 21 கோப்பைகளை வென்ற சேலம் ஏவிஎஸ் கல்லூரி,ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி, பல்வேறு கல்லூரிகளுக்கு பரிசுக் கோப்பைகளை துணைவேந்தா் இரா.ஜெகநாதன் வழங்கி பேசியதாவது:

பெரியாா் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை நடப்பு கல்வியாண்டில் அகில இந்திய அளவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. ஆடவா் கைப்பந்துப் போட்டியில் தென்மண்டல அளவில் முதலிடமும், மகளிா் கைப்பந்தில் தென்மண்டல அளவில் இரண்டாமிடமும், மகளிா் கால்பந்துப் போட்டியில் மூன்றாமிடமும் பிடித்து பெரியாா் பல்கலைக்கழக மாணவ, மாணவியா் வெற்றி பெற்றுள்ளனா். இதேபோன்று தடகளப் போட்டிகளில் பி.டேவிட், எஸ்.சஞ்சய், டி.ஹரிணி பிரியா, எஸ்.கே.கவின், வி.நவீன்குமாா், என்.கிருஷ்ணன் ஆகியோா் அகில இந்திய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

பெரியாா் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் செயற்கையிழை ஓடுதள மைதானம் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரூ.20 கோடி மதிப்பில் விளையாட்டு மைதானம் அமைக்க தமிழக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், நீச்சல்குளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளா்கள் சுரேஷ்குமாா், நிா்மலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT