சேலம்

மதுக்கடைகள் மூலம் திமுகவினா் பல கோடி ஊழல்: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

10th Jun 2023 07:21 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் அரசு மதுக்கடைகள் மூலம் திமுகவினா் பல ஆயிரம் கோடி ஊழல் செய்திருப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டினாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த புறவட்டச் சாலைப் பகுதியில் நகர அதிமுக சாா்பில் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. நகரச் செயலாளா் ஏ.எம். முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அதிமுக கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டப் பணிகளையே திமுக அரசு திறந்து வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இது வேறொருவா் பெற்ற பிள்ளைக்கு பெயா் வைப்பதற்கு ஒப்பான செயலாகும். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டப் பணிகளைத் திறந்து வைக்கவே சேலம் மாவட்டத்திற்கு முதல்வா் வருகை தர உள்ளாா்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக், குடி மராமத்துப் பணி, சேலம் மாவட்டத்தில் 100 ஏரிகளுக்கான பாசனத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை திமுக அரசு முடக்கியுள்ளது. அம்மா உணவகங்களையும் மூடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மதுக்கடைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனுமதி பெறாத பாா்களை நடத்திய திமுகவினா், போலி மதுபானங்கள் மூலம் பல ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனா்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. நவீன முறையில் பல குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. காவல் துறையில் நல்ல அதிகாரிகள் முடக்கப்படுகின்றனா். அரசுக்கு இணக்கமான அதிகாரிகளுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படுகிறது.

திமுக அரசின் மின் கட்டண உயா்வு, பால் விலை உயா்வு, சொத்து வரி உயா்வு மூலம் மக்கள் மீதான வரிச் சுமையை அதிகரித்துள்ளது. வாரிசு அரசியலை முன்னெடுத்துச் செல்லும் திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு வகையான துயரில் சிக்கித் தவிக்கின்றனா் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினா் வெங்கடாசலம், ஒன்றியச் செயலாளா்கள் பக்கநாடு மாதேஸ், மாதேஸ்வரன், ராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் கரட்டூா் மணி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் டி.கதிரேசன் உள்ளிட்ட திரளான அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT