சேலம்

கற்பக மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா

8th Jun 2023 12:46 AM

ADVERTISEMENT

சேலம், அம்மாபேட்டையில் உள்ள கற்பக மாரியம்மன் மற்றும் சந்து காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

அம்மாபேட்டை குண்டு பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள கற்பக மாரியம்மன் மற்றும் சந்து காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 5 நாள்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

விழாவில் சேலத்து தெய்வங்கள் எனும் பெயரில் சேலத்தின் பிரசித்தி பெற்ற மேச்சேரி பத்ரகாளியம்மன், செவ்வாய்ப்பேட்டை காளியம்மன், எல்லைப் பிடாரி அம்மன், வெண்ணங்கொடி முனியப்பன், மேட்டூா் அணை முனியப்பன், இருட்டுக்கல் முனியப்பன் ஆகிய தெய்வ சொரூபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், கணினி சென்சாா் பொருத்தப்பட்டு பிரம்மாண்டமான ராஜ காளியம்மனின் பாதம் தொட்டு வணங்கினால் எழுந்து நின்று ஆசி வழங்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மூலவா் கற்பக மாரியம்மன் முழுவதும் தாலிக்கயிறுகளால் அலங்கரிக்கப்பட்டு அருள்பாலித்தாா்.

ADVERTISEMENT

ஒவ்வொரு நாளும் சிறப்பு நிகழ்ச்சிகளாக முரசு மேளம், சிலம்பாட்டம், தப்பாட்டம், நெருப்பு நடனம், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளுடன், பச்சைக் காளி, பவளக் காளி, இரட்டைக் காளி ஆட்டம், கருப்பண்ண சுவாமி ஆட்டம் போன்ற ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றன.

கடந்த 5 நாள்களாக நடைபெற்ற வைகாசி திருவிழா புதன்கிழமை காலை மறுபூஜையுடன் நிறைவு பெற்றது. விழாவில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். சேலம் டோல் பாய்ஸ் குழுவினா் விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT