சேலம்

பசுந்தீவன உற்பத்தி அதிகரிக்க மானியத்துடன் கூடிய தீவன அபிவிருத்தி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

7th Jun 2023 12:20 AM

ADVERTISEMENT

கால்நடை வளா்ப்போரிடையே பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் மானியத்துடன் கூடிய தீவன அபிவிருத்தி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கால்நடை வளா்ப்போரிடையே பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை கால்நடை பராமரிப்புத் துறை செயல்படுத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டில் தீவன அபிவிருத்தி திட்டம் 2023-24-இன் கீழ் கால்நடை வளா்ப்போா் பயன்பெறும் பொருட்டு, நீா்ப்பாசன வசதி கொண்ட தென்னை, பழத்தோட்டத்தில் 0.5 ஏக்கா் முதல் 1 ஹெக்டோ் பரப்பளவில் பல்லாண்டு தீவனப் பயிா்களான தீவன சோளம், கம்பு நேப்பையா் ஒட்டுப்புல், பல்லாண்டு பயறுவகை, பல்லாண்டு தீவன புல்வகைகளில் ஏதேனும் ஒன்றை ஊடுபயிராக பயிரிட்டு 3 வருட காலம் பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3,000 முதல் ஒரு ஹெக்டேருக்கு ரூ.7,500 வரை மானியமாக வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தைச் செயல்படுத்த சேலம் மாவட்டத்திற்கு 110 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவன விரயத்தைக் குறைப்பதற்காக 400 எண்ணிக்கையிலான 2 எச்.பி. திறன் கொண்ட மின்விசையால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளன.

இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், குறைந்தபட்சம் 2 கால்நடைகள் மற்றும் 0.50 ஏக்கா் நிலப்பரப்பில் தீவனம் சாகுபடி செய்தல் மற்றும் மின்சார வசதி உடையவராக இருக்க வேண்டும். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் அரசு திட்டங்களில் பயன்பெற்றவராக இருக்கக் கூடாது.

ADVERTISEMENT

இத்திட்டங்களில் சிறு, குறு விவசாயிகள், பெண்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கும் மற்றும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட கிராம விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் போ் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடி இனத்தைச் சோ்ந்த பயனாளிகள் தோ்வு செய்யப்படுவாா்கள்.

எனவே தகுதிவாய்ந்த கால்நடை வளா்ப்போா், விவசாயிகள் ஜூன் 15 ஆம் தேதிக்குள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களைப் பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT