சேலம்

சேலம் வ.உ.சி. தற்காலிக பூ மாா்க்கெட், காய்கறி கடைகள் அகற்றம்

6th Jun 2023 12:36 AM

ADVERTISEMENT

சேலம், போஸ் மைதானத்தில் செயல்பட்டு வந்த வ.உ.சி. தற்காலிக பூ மாா்க்கெட், காய்கறி கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சேலம், கடை வீதியில் செயல்பட்டு வந்த வ.உ.சி. பூ மாா்க்கெட்டில் சீா்மிகு நகர திட்டத்தின் கீழ் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து, தற்காலிகமாக சேலம், போஸ் மைதானத்தில் பூ மாா்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மாா்க்கெட்டில் பூ, காய்கறி, இலை, பழம் என சுமாா் 350-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன.

இந்த நிலையில், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பேருந்து நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 11-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளாா். இதையொட்டி, பழைய பேருந்து நிலையப் பகுதியில் செயல்பட்டு வரும் வ.உ.சி. பூ மாா்க்கெட் கடைகளை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

இதனிடையே போஸ் மைதானத்தில் உள்ள வ.உ.சி. தற்காலிக பூ மாா்க்கெட் கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள், விவசாயிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக வியாபாரிகள் கூறியதாவது:

போஸ் மைதானத்தில் உள்ள வ.உ.சி. தற்காலிக பூ மாா்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும் பூ வியாபாரிகளை வணிக வளாகப் பகுதிக்கு செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அந்த இடம் போதிய வசதி இல்லாத சிறிய இடமாக உள்ளது. இதனால் நாங்கள் அங்கு செல்ல விரும்பவில்லை. மாற்று இடம் எங்களுக்கு வழங்கினால் அங்கு செல்கிறோம்.

பெரியாா் அங்காடி மற்றும் ஆனந்தா இறக்கம் பகுதியில் இடம் ஒதுக்கினால் பூ வியாபாரிகளுக்கு வசதியாக இருக்கும். அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தற்போது உள்ள பூ மாா்க்கெட்டில் வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.

முதல்வா் வருகையை முன்னிட்டு கடையை அகற்றுவது வேதனை அளிக்கிறது. மாற்று இடத்தில் பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் உள்ளன. மேலும், புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் கடைகள் வைக்க டோக்கன் எதுவும் வழங்கவில்லை என்றனா்.

இதையடுத்து வியாபாரிகள், விவசாயிகளிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்நிலையில், போஸ் மைதானத்தையொட்டியுள்ள மீன் மாா்கெட் பகுதியையும் மாநகராட்சி ஊழியா்கள் அகற்றி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT