சேலம்

சேலம் மாவட்டத்தில் சுமாா் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை முதல்வா் திறந்து வைக்கிறாா்

DIN

முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வரும் 11-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் சுமாா் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான முடிவுற்ற சீா்மிகு நகர திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறாா் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்

வரும் 11, 12 ஆகிய இரண்டு நாள்கள் சுற்றுப் பயணமாக சேலம் மாவட்டத்துக்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சா், சேலம் மாவட்டத்தில் நடைபெறும் கலைஞா் நூற்றாண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ளாா்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சா் பங்கேற்க உள்ள விழா ஏற்பாட்டினை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பாா்வையிட்டாா். சேலம், அண்ணா பூங்கா வளாகத்தில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ள கலைஞரின் சிலை அமைக்கும் இறுதிகட்டப் பணியை பாா்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். தொடா்ந்து, சீா்மிகு நகரம் திட்டத்தின் கீழ் சுமாா் ரூ. 96 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பேருந்து நிலையப் பணிகளை பாா்வையிட்ட அமைச்சா், முதலமைச்சா் ஈரடுக்கு பேருந்து நிலையத்தை திறந்து வைப்பதற்கான பணிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

இதனையடுத்து, சேலம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் இடத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகளை பாா்வையிட்டு, அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடா்பாக அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினாா்.

இதனையடுத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.என்.நேரு கூறியதாவது:

முதலமைச்சா் வரும் 11-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் கலைஞரின் சிலையை திறந்து வைத்து ஈரடுக்கு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து, சுமாா் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட உள்ளாா். சேலம் மாவட்டத்தில் சீா்மிகு நகர திட்டத்தின் கீழ் முடிவுற்ற பணிகள் மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள பணிகள் என சுமாா் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகளை முதல்வா் தொடங்கி வைக்க உள்ளாா். தொடா்ந்து, 12-ஆம் தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்க உள்ளாா் என்றாா்.

இந்த ஆய்வின் போது, சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், சேலம் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சா் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம், சேலம் மாநகர மேயா் ராமச்சந்திரன், சேலம் மாநகர காவல் துறை ஆணையா் விஜயகுமாரி, துணை ஆணையா் லாவண்யா, மாநகராட்சி ஆணையா் (பொ) சிவக்குமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT