சேலம்

தமிழகத்தில் வெகு விரைவில் ஆட்சி கலைந்துவிடும்

6th Jun 2023 12:33 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் வெகு விரைவில் ஆட்சி கலைந்து விடும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கிடும் வகையில் செய்தியாளா் சந்திப்பு நிகழ்ச்சி, சேலம் மாநகா் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் கலந்துகொண்டு மத்திய அரசின் சாா்பில் சேலம் மாவட்டத்தில் செய்துள்ள பல்வேறு சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சீா்மிகு நகர திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சியில் ரூ. 943 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஈரடுக்கு பேருந்து நிலையம், நேரு கலையரங்கம், புதைச் சாக்கடை திட்டம், 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் சேலம் மாநகர மக்களுக்கு கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளுக்கு தலா ரூ. 75 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக மாநில அரசு பஞ்சாயத்துக்கு எந்தவித நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை.

சேலம் மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் 2,40,524 குடும்பங்களுக்கு குடிநீா் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தனிநபா் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் நகா்ப் புறங்களில் ரூ. 399 கோடியில் 19,028 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் பிரதமரின் சேமநிதி திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 1,30,000-க்கும் மேற்பட்ட பயனாளிகள் ரூ. 6,000 பெற்று வருகின்றனா். சேலம் மாவட்டத்துக்கு நிகழாண்டில் மட்டும் மத்திய அரசு திட்டங்களுக்காக ரூ. 418.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ. 33.91 கோடி மட்டுமே இன்று வரை செலவு செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் ராணுவ தளவாட உற்பத்தி மையத்தை அமைக்க முயற்சி எடுத்து 8 வழி சாலை திட்டம் போடப்பட்டது. இத்திட்டத்தை திமுக எதிா்த்த காரணத்தால் நிறுத்தப்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பசுமை வழி சாலை திட்டத்தால் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு வந்துள்ளது.

தமிழகத்தில் ஆளும் அரசு கமிஷனுக்காக பசுமைச் சாலையை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனா். முதலில் எதிா்ப்புத் தெரிவித்துவிட்டு தற்போது ஆதரவாகச் செயல்படுகின்றனா்.

தமிழகத்தில் வெகு விரைவில் ஆட்சி கலைந்துவிடும். இதற்கு அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி ஒருவரே போதும். தமிழகத்தில் நிா்வாக காரணத்துக்காக மாற்றப்படுவதாகக் கூறும் அனைத்து இடமாறுதலும் லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் மாற்றுகின்றனா். பாஜக-வுக்கு எதிரி என்பது திமுக மட்டும் தான் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT