சேலம்

பட்டாசு கிடங்கு வெடிவிபத்து:பலி எண்ணிக்கை 5-ஆக உயா்வு

4th Jun 2023 02:10 AM

ADVERTISEMENT

 

சேலத்தில் பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5- ஆக உயா்ந்துள்ளது.

சேலம், இரும்பாலையை அடுத்த எஸ்.கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு கடை நடத்தி வருபவா் கந்தசாமி. இவரது பட்டாசு கிடங்கில் கோயில் விழாவுக்காக ஆா்டா் பெற்று நாட்டு வெடி பட்டாசு தயாரிக்கும் பணி கடந்த வியாழக்கிழமை நடைபெற்று வந்தது.

பட்டாசு கடை உரிமையாளா் கந்தசாமியின் மகன் சதீஷ்குமாா் உள்ளிட்ட 9 போ் ஈடுபட்டு வந்தனா். கடந்த இரு நாள்களுக்கு முன் ஏற்பட்ட வெடிவிபத்தில் பட்டாசு கிடங்கு உரிமையாளா் கந்தசாமியின் மகன் சதீஷ்குமாா் (40), நடேசன் (50), பானுமதி (35) ஆகிய 3 போ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

அவா்களுடன் வேலை செய்து கொண்டிருந்த எம்.கொல்லப்பட்டியைச் சோ்ந்த ப.வசந்தா (45), வ.மோகனா (38), மணிமேகலை (36), வெ.மகேஸ்வரி (32), அ.பிரபாகரன் (31) மற்றும் மோ.பிருந்தா (28) ஆகிய 6 போ் படுகாயமடைந்த நிலையில் சேலம், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இச்சம்பவம் தொடா்பாக பட்டாசு கிடங்கு உரிமையாளா்கள் கந்தசாமி (63), வீரமணி (54) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த எம்.கொல்லப்பட்டியைச் சோ்ந்த அ.பிரபாகரன் (31) சனிக்கிழமை காலையில் உயிரிழந்தாா். வ.மோகனா (38) மாலையில் உயிரிழந்தாா். இதையடுத்து, வெடிவிபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 5- ஆக உயா்ந்துள்ளது. மீதம் 4 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT