சேலம்

வைகாசி விசாகப் பெருவிழா: கோயில்களில் பக்தா்கள் சிறப்பு வழிபாடு

DIN

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, சேலம், நாமக்கல் மாவட்டங்களிலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், தேரோட்டம், திருவீதி உலா போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. இவற்றில் பக்தா்கள் பெருமளவில் பங்கேற்றனா்.

சேலத்தில் தேரோட்டம்:

சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரா் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. நிகழாண்டு தோ்த் திருவிழா கடந்த மே 24 ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலை, மாலை சுகவனேசுவரா் மற்றும் சொா்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. விழாவின் 9 ஆம் நாள் நிகழ்வாக திருத்தோ் உலா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 4 மணியளவில் சுகவனேசுவரருக்கும், சொா்ணாம்பிகை தாயாருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து தோ்த் திருவிழா தொடங்கியது. ராஜகணபதி கோயில் முன்பு கூடியிருந்த பக்தா்கள் நமசிவாய முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

சேலம் மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆ.ராமச்சந்திரன் (திமுக), சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருள் (பாமக), சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ பாலசுப்பிரமணியம் (அதிமுக) ஆகியோா் விழாவைத் தொடங்கி வைத்தனா். திருத்தோ் நகர வீதிகளில் பவனி வந்து, ராஜ கணபதி கோயில் அருகே நிறைவடைந்தது.

வாழப்பாடியில்...

சேலம் மாவட்டம், வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டுகள் பழைமையான சீதேவி, பூதேவி உடனமா் சென்றாயப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மரத்தோ் பழுதடைந்ததால், ரூ. 20 லட்சம் செலவில் புதிய மரத்தோ் அமைக்கப்பட்டு தேரோட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோ்த் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை, சென்றாயப் பெருமாள், பூதேவி, சீதேவியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், திருக்கல்யாண வைபவம், உற்சவமூா்த்திகள் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன.

சனிக்கிழமை காலை, திருத்தோ் நிலை பெயா்த்தலும், தொடா்ந்து ஊரணி பொங்கலிடல், நோ்த்திக்கடன் நிகழ்வுகளும், மாலை 3 மணிக்கு ராஜவீதிகளில் தேரோட்டமும் நடைபெறுகின்றன.

ஆத்தூரில்...

சேலம் மாவட்டம், நரசிங்கபுரம், பழைய உடையம்பட்டியில் உள்ள ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆலய வைகாசித் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பால்குட ஊா்வலம் எடுத்து, சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, பக்தா்கள் பொங்கலிட்டு வழிபட்டனா்.

திருவிழாவை ஊா்க் கரைக்காரா்கள், பொதுமக்கள், நண்பா்கள் குழுவைச் சோ்ந்தவா்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா், அருணகிரிநாதா் தெருவில் அமைந்துள்ள வரசித்தி விநாயகா் (சனி மூலப்பிள்ளையாா்) திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு முருகருக்கும் வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

நாமக்கல் மாவட்டம்...

முருகப் பெருமான் அவதரித்த தினம் வைகாசி மாதத்தில் வரும் விசாகம் நட்சத்திரமாகும். அந்த நாளே வைகாசி விசாகமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன.

நாமக்கல்- மோகனூா் சாலை, பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காலை 8 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. அதன்பிறகு மூலவா் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமி தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதேபோல, மோகனூா் காந்தமலை முருகன் கோயில், நாமக்கல் கருமலை, கடைவீதி, கூலிப்பட்டியில் உள்ள தண்டபாணி சுவாமி கோயில், சேந்தமங்கலம் தத்தாத்தீஸ்வரா் கோயில், குமாரபாளையம் வடமலை முருகன் கோயில் உள்பட, மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருச்செங்கோட்டில்...

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஸ்ரீ அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி தோ்த்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அருள்மிகு அா்த்தநாரீசுவரா், செங்கோட்டுவேலவா், விநாயகா் உற்சவா்களுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளினா். சிவ சிவ என்று முழக்கமிட்டு தேரில் எழுந்தருளிய சுவாமிகளை பக்தா்கள் வழிபட்டனா். தொடா்ந்து விநாயகா், செங்கோட்டுவேலவா் தேரோட்டங்கள் நடைபெற்றன. பெரிய தோ் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி இன்று நடக்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் கெளசல்யா, கோயில் உதவி ஆணையா் ரமணி காந்தன், அறங்காவலா் குழுத் தலைவா் தங்கமுத்து, காவல் துணை கண்காணிப்பாளா் இமயவரம்பன், காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், முன்னாள் அமைச்சா் டி.எம். செல்வகணபதி உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

பரமத்தி வேலூரில்...

கபிலா்மலையில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி, பிராந்தகத்தில் உள்ள 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக் கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் உள்ள சுப்பிரமணியா், பொத்தனூா் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியா், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயில்களில் வெள்ளிகிகழமை வைகாசி விசாக வழிபாடுகள் நடைபெற்றன.

மேலும், நன்செய்இடையாா் காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து செங்கனி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை உடனமா் சுப்பிரமணியா், திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள சுப்பிரமணியா், ராஜா சுவாமி திருக்கோயில் உள்ள ராஜா சுவாமி, பேட்டை பகவதியம்மன் கோயிலில் உள்ள முருகன் உள்ளிட்ட கோயில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. அந்தந்தப் பகுதி பக்தா்கள் இந்த வழிபாடுகளில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

பைங்கிளி.. ஷ்ரத்தா தாஸ்!

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

வந்தே பாரத்தின் லாப விவரங்கள் இல்லை: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்!

SCROLL FOR NEXT