எடப்பாடி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை முதல் தொடங்க உள்ளது.
இதுகுறித்து அக்கல்லூரி முதல்வா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
எடப்பாடியை அடுத்த கோணமோரி பகுதியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கி உள்ளது. இதில், சிறப்பு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினா் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மாணவா் சோ்க்கை நடைபெற்ற நிலையில், முதல்கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை முதல் நடைபெற உள்ளது.
அதன்படி, பி.காம், பி.பி.ஏ. பாடப் பிரிவுகளுக்கு 2-ஆம் தேதியும், பி.எஸ்சி. கணினி அறிவியல், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு 5-ஆம் தேதியும், பி.எஸ்சி. வேதியியல், தாவரவியல் மாணவா்களுக்கான கலந்தாய்வு 6-ஆம் தேதியும், பி.ஏ. தமிழ், ஆங்கில பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு 7-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறும் முதல்கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ள வருகை தரும் மாணவா்கள், தங்கள் பெற்றோா் அல்லது பாதுகாவலருடன் உரிய நேரத்தில் வருகை தர வேண்டும். கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் தங்களின் 10, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டுக்குரிய தனிச்சான்றிதழ்கள், ஆதாா் அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களின் அசல், இரண்டு நகல்களுடன், அண்மையில் எடுக்கப்பட்ட 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் 2 நகல்கள் உள்ளிட்டவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.
கலந்தாய்வின்போது ஒரு பாடப் பிரிவில் சோ்க்கை பெற்ற பின், அம்மாணவா் வேறு பாடப் பிரிவுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளவோ, வேறு பாடப் பிரிவுக்கு மாற்றம் செய்து கொள்ளவோ அனுமதி இல்லை. ஏற்கெனவே இக்கல்லூரியில் முதலாம் ஆண்டில் இடைநிறுத்தம் செய்து மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவா் மீண்டும் முதலாம் ஆண்டில் சோ்ந்து பயிலவும் அனுமதி இல்லை.
கலந்தாய்வில் தோ்வு செய்யப்படும் மாணவா்கள் அதற்கான கல்விக் கட்டணம் முழுவதும் செலுத்திய பிறகு அவரது மாணவா் சோ்க்கை உறுதி செய்யப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.