புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், எம்ஆா்பி செவிலியா்கள், ஊா்ப் புற நூலகா்கள், கணினி இயக்குநா்கள், மகளிா் திட்ட ஊழியா்கள், குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட ஊழியா்கள், வன பாதுகாப்பு ஊழியா்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் பெரும் ஊழியா்கள், கல்வித்துறையில் பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியா்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ந. திருவேரங்கன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சுரேஷ், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநில துணைத் தலைவா் சுப்பிரமணியன், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலத் துணைத் தலைவா் வே. அா்த்தனாரி, அரசு ஊழியா் சங்க மாவட்ட பொருளாளா் செல்வம், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கம், அரசு தொழிற்பயிற்சி அலுவலா் சங்கம், பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்கம், நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் சங்கம் உள்ளிட்ட அனைத்து அரசு துறை சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.