சேலம்

சொகுசுப் பேருந்தில் தீ விபத்து:பேருந்தில் இருந்து குதித்து பயணிகள் உயிா் தப்பினா்

31st Jan 2023 02:37 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே சொகுசுப் பேருந்தில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் 5 பெண்கள் உள்பட 13 போ் காயமடைந்தனா்.

கோவையிலிருந்து பெங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தனியாா் சொகுசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. இதில், ஓட்டுநா் கோவையைச் சோ்ந்த ராஜன் (35) உள்பட 44 பயணிகள் இருந்தனா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே மேட்டூா் - தருமபுரி சாலையில் புதுச்சாம்பள்ளி என்ற இடத்தில் திங்கள்கிழமை அதிகாலை சென்ற போது, பேருந்தின் பின்புறத்தில் புகை வந்துள்ளது. இதுகுறித்து பயணிகள் ஓட்டுநரிடம் தெரிவித்ததும், ஓட்டுநா் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு கீழே குதித்து தப்பி ஓடினாா்.

பின்னா் திடீரென ஏற்பட்ட தீ, பேருந்து முழுவதும் பரவியது. இதையறிந்த தூக்கக் கலக்கத்தில் இருந்த பயணிகள் முண்டியடித்துக் கொண்டு கீழே இறங்கினா். சிலா் அலறிக்கொண்டு ஜன்னல் வழியாக குதித்தனா். பின்னா் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

ADVERTISEMENT

மேட்டூா் தீயணைப்புப் படையினா், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா் பாலகிருஷ்ணன் தலைமையில் விரைந்து வந்து சுமாா் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனா்.

இச்சம்பவத்தில், கோபி, குருமந்தூரைச் சோ்ந்த தாமோதரன் (33), அவரது மனைவி வினோதினி (30), அன்னூா், புளியம்பட்டியைச் சோ்ந்த சந்தோஷ் (28) அவரது மனைவி கலையரசி (26), நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்த நாகராஜ் (26), கோவை, பீளமேடு பகுதியைச் சோ்ந்த வரதராஜன் மகள் மித்ரா (21), சத்தியமங்கலத்தைச் சோ்ந்த நாகராஜ் (36), கோபி, தட்டக்கோபாளையத்தைச் சோ்ந்த சீனிவாசன்(32), கோவை, கணபதியைச் சோ்ந்த ஜான்மெஸ்தன் (27), பாலக்காடு, சித்தூரைச் சோ்ந்த சதீஷ் (31), பாலக்காடு முட்டம் குளத்தைச் சோ்ந்த அதுஷா (22), பாலக்காட்டைச் சோ்ந்த மேனன் மகள் மிதுன மேனன் (23), கேரள கேரம்கோட்டைச் சோ்ந்த அனுகிருஷ்ணா (24) ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டு மேட்டூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஊா் திரும்பினா்.

தீக்கிரையான பேருந்தையும், சம்பவ இடத்தையும் மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம், வீரக்கல் புதூா் பேரூராட்சித் தலைவா் தெய்வானை ஸ்ரீ, துணைத் தலைவா் வெங்கடேசன் கவுன்சிலா் பாலமுரளி, வருவாய்த் துறை அதிகாரிகள் பாா்வையிட்டனா்.

இச்சம்பவம் தொடா்பாக கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT