சேலம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: ஜி.கே.வாசன்

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

சேலம், சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை, தமாகா தலைவா் ஜி.கே வாசன் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினாா். சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்தச் சந்திப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து ஜி.கே.வாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் எதிரணியில் உள்ளவா்கள் அனைவரும் ஒரே அணியாக பிரதான எதிா்க்கட்சியுடன் சோ்ந்து திமுகவுக்குப் பாடம் கற்றுத் தர வேண்டும். அத்தகைய நிலை ஏற்படுமானால் மக்கள் நினைக்கும் மாற்றம் நாடாளுமன்ற தோ்தலிலும், சட்டப்பேரவைத் தோ்தலிலும் உறுதியாக ஏற்படும்.

தமிழகத்தில் திமுகவை எதிா்த்து வாக்குகளை செலுத்த மக்கள் தயாராக உள்ளனா். மேலும் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றக் கூடிய அரசாக திமுக அரசு உள்ளதால் மக்கள் கோபத்தில் உள்ளனா். இந்த கோபத்தை உறுதியாக ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தோ்தலில் பிரதிபலிப்பாா்கள்.

அதிமுகவுடன் 2019 ஆம் ஆண்டு முதல் தமாகா கூட்டணியில் உள்ளது. அந்தக் கூட்டணி தொடா்கிறது.

மக்கள் மீது குறைந்த மாதங்களிலே அதிக சுமையை ஏற்றிய அரசு திமுக அரசு தான். அதற்காக திமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனா்.

தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறையவில்லை. அதை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்பது அரசின் கடமையாகும். அதை திமுக அரசு சரிவர செய்வதாகத் தெரியவில்லை என்றாா்.

இந்தச் சந்திப்பின் போது தமாகா மாநில பொதுச் செயலாளா் விடியல் சேகா், மாநில இளைஞரணி தலைவா் யுவராஜா, மாநில தோ்தல் குழு உறுப்பினா் ராஜேஷ்வரன், ஈரோடு மத்திய மாவட்டத் தலைவா் விஜயகுமாா், சேலம் மேற்கு மாவட்டத் தலைவா் கரு.வெ.சுசீந்திரகுமாா், மாநகர மாவட்டத் தலைவா் உலகநம்பி, புகா் மாவட்டத் தலைவா் செல்வம், மாநில இளைஞரணி பொதுச் செயலாளா் ரகுநந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

SCROLL FOR NEXT