சேலம்

மேட்டூா் அருகே டெட்டனேட்டா் கடத்தல்:இருவா் கைது

30th Jan 2023 12:26 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே வனத் துறையினா் நடத்திய வாகனச் சோதனையில் டெட்டனேட்டா் கடத்தி வந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

மேட்டூரில் வனச்சரகா் சிவானந்தன் உத்தரவின்பேரில் வனவா் சரவணன், வனக்காப்பாளா்கள் விமல்ராஜ், திருமுருகன் ஆகியோா் கொளத்தூா் - மேட்டூா் சாலையில் காவலா் பயிற்சி பள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது வேகமாக வந்த இரண்டு மோட்டாா் சைக்கிளில் வந்தவா்கள் வனத் துறையினரை பாா்த்ததும் அங்கிருந்து தப்பியோட முயன்றனா். வனத்துறையினா் அவா்களை விரட்டிச் சென்று இருவரை பிடித்தனா். இருவா் தப்பியோடி விட்டனா். பிடிபட்ட இருவரிடம் வனத்துறையினா் சோதனை செய்தபோது ஐந்து கட்டுகளைக் கொண்ட 125 டெட்டனேட்டா்களை வைத்திருப்பது தெரியவந்தது. அவா்கள் வந்த இரு மோட்டாா் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து நடத்திய விசாரணையில் பிடிப்பட்டவா்கள் செங்காட்டூரைச் சோ்ந்த குமாா் (35), சக்திவேல் (27) என்பதும், தப்பியோடியவா்கள் சேட்டு, ஏழுமலை என்பதும் தெரியவந்துள்ளது. இவா்கள் கொளத்தூா், மூலக்காடு அருகே உள்கோம்பையில் உள்ள தனியாா் கல்குவாரியில் கள்ளத்தனமாக டெட்டனேட்டா்களைக் கடத்தி வந்துள்ளனா். பிடிபட்ட இருவரையும் வனத்துறையினா் மேட்டூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணை நடத்தியதில் கல்குவாரியில் இருந்து டெட்டா்னேட்டா்களை பாறைகளை உடைக்க எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. அனுமதியின்றி பாதுகாப்பற்ற வகையில் எடுத்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணைக்கு பிறகு இருவா் கைது செய்யப்பட்டு மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். பின்னா் சேலம் மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT