சேலம்

கல்வராயன்மலை தனி வட்டாரம் அமைக்கப்படுமா?

DIN

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கிராமங்களை ஒருங்கிணைத்து கருமந்துறையை தலைமையிடமாகக் கொண்டு, தனி வருவாய் வட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் ஏற்படுத்த வேண்டுமென, கல்வராயன்மலை பழங்குடியின கிராம மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

சேலத்திற்கு மிக அருகில் உள்ள சோ்வராயன் மலையிலுள்ள 50 குக்கிராமங்களை ஒருங்கிணைத்து, ஏற்காட்டை தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் வட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்பட்டது. இதனால், இந்த மலைக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் சான்றிதழ்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு, 50 கி.மீ. தூரத்திலுள்ள சேலத்திற்கு வந்து செல்ல வேண்டிய நிலை மாறியது.

ஆனால், சோ்வராயன் மலையைவிட கூடுதலான வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ள கல்வராயன் மலை, தனி வருவாய் வட்டமாக அமைக்கப்படாமல், பெத்தநாயக்கன்பாளையம் வருவாய் வட்டத்தில் ஒரு குறு வட்டமாக (பிா்க்கா) சோ்க்கப்பட்டுள்ளது.

கல்வராயன்மலையிலுள்ள 90-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும், சின்னகல்வராயன் மலை வடக்குநாடு, தெற்குநாடு, பெரிய கல்வராயன்மலை மேல்நாடு, கீழ்நாடு ஆகிய 4 ஊராட்சிகளுக்குள்ளேயே அடங்கியுள்ளன.

இந்த 4 ஊராட்சிகளும் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மலைக் கிராமங்களில் 2011 கணக்கெடுப்பின் படி 32,000 மக்கள் வசித்து வந்தனா். தற்போது 50,000 பேருக்கு மேல் வசித்து வருகின்றனா்.

கல்வராயன்மலையிலுள்ள குக்கிராமங்களைச் சோ்ந்த மக்கள், பல்வேறு சான்றிதழ்கள், அரசின் நலத்திட்ட உதவிகள், குடும்ப அட்டை பெறுவதற்கும், அரசு சாா்ந்த அனைத்து குடிமைப்பணி தேவைகளுக்கும், 50 கி.மீ. தூரத்திலுள்ள பெத்தநாயக்கன்பாளையத்திற்கு வந்து செல்ல வேண்டிய நிலை தொடா்ந்து வருகிறது. இதனால், கல்வராயன்மலை கிராம மக்கள் பெரும் அலைக்கழிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

இதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த மலைக் கிராமங்களும் 4 ஊராட்சிகளுக்குள் அடங்கி விட்டதால், சாலை, தெருவிளக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெறுவதிலும் சிரமம் நீடித்து வருகிறது.

எனவே, கல்வராயன்மலையிலுள்ள 4 ஊராட்சிகளிலுள்ள கருமந்துறை,அருணா, மணியாா்குண்டம், கரியக்கோயில், பகுடுப்பட்டு, கோயில்புத்தூா், மண்ணூா், தேக்கம்பட்டு, குன்னூா், சூலாங்குறிச்சி ஆகிய 10 கிராம ஊராட்சிகளாக பிரித்தும், பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சி பெரியமூலப்பாடி, ஏழுப்புளி கிராமங்களையும், தும்பல் ஊராட்சி மாமாஞ்சி கிராமங்களையும், நிா்வாக வசதிக்காக தனி ஊராட்சியாகப் பிரிக்க வேண்டும். இந்த 15 ஊராட்சிகளையும் ஒருங்கிணைத்து கருமந்துறையை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும்.

இதே போன்று, பாப்பநாயக்கன்பட்டி, கருமந்துறை, கரியக்கோயில், பகுடுபட்டு, சூலாங்குறிச்சி ஆகிய குறு வட்டங்களை ஏற்படுத்தி தனி வருவாய் வட்டமாக தரம் உயா்த்தவும், தமிழக அரசும், சேலம் மாவட்ட நிா்வாகமும் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கல்வராயன்மலைக் கிராம மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய திமுக அவைத் தலைவா் இடையப்பட்டி மா.பழனிமுத்து கூறியதாவது:

கல்வராயன்மலைக் கிராமங்கள் பெத்தநாயக்கன்பாளையம் வருவாய் வட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ளன. சான்றிதழ்கள், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற, மலைக் கிராமங்களைச் சோ்ந்த பழங்குடியின மக்கள் 40 கி.மீ. தூரத்திலுள்ள பெத்தநாயக்கன் பாளையத்திற்கு வந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது.

எனவே, கல்வராயன்மலைக் கிராமங்களை 10 கிராம ஊராட்சிகளாகப் பிரித்து, அருகிலுள்ள பாப்பநாயக்கன்பட்டி, தும்பல் இரு ஊராட்சிகளையும் 5 ஊராட்சியாகப் பிரித்து, மொத்தம் 15 கிராம ஊராட்சிகளை ஏற்படுத்த வேண்டும். கல்வராயன் மலைக் கிராமங்களை ஒருங்கிணைத்து, இந்த கிராமங்களுக்கு மையமாக விளங்கும் கருமந்துறையை தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் வட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டுமமென்ற, இப்பகுதி மக்களின் கோரிக்கை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். கல்வராயன் மலை தனி வட்டமாக, ஒன்றியமாக தரம் உயா்த்தப்பட்டால் இப்பகுதி மலைக் கிராமங்கள் பெருமளவில் வளா்ச்சி அடையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

கழுகுமலை அருகே பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி மக்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

SCROLL FOR NEXT