சேலம்

கோயிலில் சிலை அமைப்பதில் இரு தரப்பினரிடையே தகராறு

22nd Jan 2023 03:55 AM

ADVERTISEMENT

 

எடப்பாடி அருகே கோயிலில் சிலை அமைப்பது தொடா்பாக இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதால் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட வெள்ளரி வெள்ளி ஊராட்சி, வேட்டுவபட்டியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் புதுப்பிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. இந்த நிலையில் கோயிலை புனரமைக்கும் பணியில் நிதி முறைகேடு செய்ததாகக் கூறி ஒரு சிலரை ஊா் மக்கள் திருப்பணி குழுவில் இருந்து விலக்கி வைத்தனராம்.

கோயில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கருவறையில் அம்மன் சிலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மகா மாரியம்மன் கோயில் கருவறைக்குள் அமைவதற்கான அம்மன் சிலைகளை இரு தரப்பினரும் தனித்தனியாக ஏற்பாடு செய்து கோயிலில் நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை கோயிலில் சிலை நிறுவுவதற்காக ஊா்வலமாக வந்த ஒரு தரப்பினரைத் தடுத்து நிறுத்திய போலீஸாா் கோயிலில் சிலை அமைப்பது குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடிவுக்குப் பிறகே சிலை நிறுவுவதற்கு அனுமதி அளிக்கப்படும் எனவும், அதுவரை இரு தரப்பினரும் காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் பகுதியில் அத்து மீறி நுழைந்து சிலைகளை நிறுவ முற்படக் கூடாது என அறிவுறுத்தி, அங்கிருந்து அவா்களை அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT