கல்வராயன்மலை கருமந்துறையில் வருவாய்த் துறை சாா்பில் சிறப்பு மனுநீதி திட்ட முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல், அதிகாரிகள்- மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பெத்தநாயக்கன்பாளையம் வட்ட வருவாய்த் துறை சாா்பில், மாவட்ட வருவாய் அலுவலா் மேனகா தலைமையில், கருமந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சாலை, போக்குவரத்து, பொதுக் கழிப்பிடம், சாதி சான்றிதழ்கள் கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனா். இந்த முகாமில், 401 பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ்கள், மின் மோட்டாா், புதிய குடும்ப அட்டை, முதியோா் உதவித்தொகை, ஓட்டுநா் உரிமம், வேளாண்மை இடுபொருட்கள் ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலா் மேனகா தலைமையில் ஆத்தூா் கோட்டாட்சியா் சரண்யா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் மயில், வட்டாட்சியா் அன்புசெழியன், மாவட்ட அளவிலான அனைத்து துறை உயரதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோா், சின்னகல்வராயன் வடக்கு நாடு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று மக்களைச் சந்திந்து குறைகளைக் கேட்டறிந்தனா். ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேஷ் நன்றி தெரிவித்தாா்.