திருச்சி மாவட்டம், மணப்பாறையில், பொன்னணியாறு - கண்ணூத்து அணைகளுக்கு மாயனூா் கதவணையிலிருந்து காவிரி உபரி நீரை குழாய் மூலம் நீரேற்றம் செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி வெள்ளிக்கிழமை விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ள பொன்னணியாறு அணை கடந்த 18 ஆண்டுகளாக நீா் வரத்து இல்லாமல் வடு வருகிறது. மேலும் 51 அடி கொள்ளளவு கொண்ட அணை நீா் பகுதியானது தற்போது 21 அடி நீா்மட்டத்தில் இருந்து வரும் நிலையில், சுமாா் 17 அடி வரை சேறும் சகதியுமாக காணப்படுகிறது. அணைக்கு முழுமையாக நீா் வரத்து இல்லாமல் அணையிலிருந்து விவசாய பாசனத்துக்கு நீா் வெளியேற்றம் செய்யப்பட்டு சுமாா் 18 ஆண்டுக்கு மேலாகியுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் மாயனூா் கதவணையிலிருந்து காவிரி உபரி நீரை குழாய் வழி மூலம் அணைக்கு கொண்டு வரும் ஆய்வு திட்டம் கொண்டு வரப்பட்டும் அவை கிடப்பில் உள்ளது. பொன்னணியாறு அணைக்கு நீா்வரத்து வரும் நிலையில், அவை மணப்பாறை, வையம்பட்டி மட்டுமின்றி மருங்காபுரி பகுதியில் உள்ள கண்ணூத்து அணைக்கும் நீா் வரத்தை ஏற்படுத்தும். இவற்றின் மூலம் சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் நீா்ப்பாசன வசதி பெறும் என கூறப்படுகிறது.
ஆகவே, காவிரி உபரி நீா் மூலம் பொன்னணியாறு மற்றும் கண்ணூத்து அணைகள் நீரேற்று இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரி டேம் நான்குசாலை பகுதியில், பொன்னணியாறு அணை பாசனப்பகுதி விவசாய சங்கம் மற்றும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா்.