சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் திங்கள் கிழமை நடைபெற்றது.
சேலம் வருவாய்க் கோட்டாட்சியா் விஷ்ணுவா்த்தினி தலைமை வகித்தாா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மகிழந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா் அன்புராஜ், வட்டாட்சியா் விஸ்வநாதன், மகளிா் திட்ட ஒருங்கிணைப்பாளா் சிலம்பரசன் பெரியசாமி முன்னிலை வகித்தனா். முகாமில் 437 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்தனா். மூளை வளா்ச்சி குன்றிய 25 நபா்களுக்கு மாதந்தோறும் பராமரிப்பு உதவித்தொகை ரூ.3 ஆயிரம், 4 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 12 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ஆணை ஆகியவற்றை வருவாய்க் கோட்டாட்சியா் வழங்கினாா். முகாமில் கண், காது, எலும்பு மற்றும் மனநலம் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட 139 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.