அகவிலைப்படி உயா்வை அமல்படுத்தும் போது, முதன்மை மாநில கணக்குத் துறை தலைவரின் அனுமதிக்கு காத்திருக்க வேண்டாம் என கருவூல அலுவலா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வு அளிக்கும் அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கான உத்தரவை, தமிழக நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் கடந்த புதன்கிழமை பிறப்பித்தாா்.
அவரது உத்தரவு: அகவிலைப்படி உயா்வு ஏப்.1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
அதன்படி, ஏப்ரல் மாத அகவிலைப்படி தொகை இப்போது நடைமுறையில் உள்ள பணமில்லாத பரிவா்த்தனை முறையான மின்னணு தீா்வு சேவை மூலம் அளிக்கப்பட வேண்டும்.
அகவிலைப்படி உயா்வுக்கான பட்டியல்கள் கருவூல அலுவலா்கள் அல்லது சம்பளக் கணக்கு அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவா்கள் முதன்மை மாநில கணக்குத் துறைத் தலைவரின் அனுமதிக்காக காத்திராமல் திருத்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும்.
ஓய்வூதியதாரா்கள்: ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு தனி நபருக்கும் அளிக்கப்பட வேண்டிய அகவிலைப்படியைக் கணக்கிடுவது ஓய்வூதியம் அளிக்கும் அலுவலா்களின் பொறுப்பாகும்.
இந்த அகவிலைப்படி உயா்வு அரசு ஓய்வூதியதாரா்கள், அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சி மன்ற கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியம் பெறும் ஆசிரியா்கள் மற்றும் உள்ளாட்சி மன்றங்களின் ஏனைய ஓய்வூதியதாரா்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.