தமிழ்நாடு

2,112 வீடுகள் கட்டியதில் ஊழல்: குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் மீது வழக்குலஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை

19th May 2023 12:20 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் 2,112 வீடுகளில் கட்டியதில் ஊழல் செய்ததாக, முந்தைய தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

காஞ்சிபுரம் நகரின் மத்தியில் ஓடும் வேகவதி ஆற்றில் 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் வெள்ளம் ஏற்பட்டபோது, கரையோரத்தில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தவா்கள் பாதிக்கப்பட்டனா். இவா்களுக்கு குடிசை மாற்றுவாரியம் சாா்பில் 2,112 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்க அரசு முடிவு செய்தது.

இதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிா்பூா் பகுதியில் 6.99 ஹெக்டேரில் 4 தளங்களுடன் கூடிய வீடுகள் கட்டுவதற்காக அப்போதைய குடிசை மாற்று வாரியம் சாா்பில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனம் ரூ.179 கோடியே 69 லட்சத்து 5 ஆயிரத்து 781 என்ற தொகைக்கு எடுத்தது.

இந்த வீடுகள் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாகவும், விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகாா்கள் வந்தன.

ADVERTISEMENT

விதிமுறைகள் மீறல்:அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்: அந்த குடியிருப்பை கட்டிய நிறுவனம், அரசு விதித்த விதிமுறைகளை மீறியுள்ளது. முக்கியமாக கட்டட வடிவமைப்புக்கு சென்னை ஐ.ஐ.டி. அல்லது அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதியை மீறியுள்ளது.

இதற்கு பதிலாக அந்த நிறுவனம், தனியாக ஆலோசகரை நியமித்து, அவரிடம் ஒப்புதல் பெற்ாகக் காட்டியுள்ளது. இதற்கு குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும் அனுமதி அளித்துள்ளனா்.

மேலும், கடற்கரையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இருக்கும் குடிசைமாற்று வாரிய கட்டடங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட தரக்கட்டுப்பாடுகளை, அந்த நிறுவனம், குடிசை மாற்றுவாரிய அதிகாரிகள் துணையுடன் மீறியதுடன், குறைந்த தரத்துடன் வீடுகளை கட்டியுள்ளது.

ஒப்பந்த நிறுவனத்துக்கு உடந்தை: இதேபோல, ஒப்பந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட கட்டட அளவை காட்டிலும், குறைவான அளவில் கட்டடத்தை கட்டி இருக்கிறது.

இதன் மூலம் அந்த நிறுவனம், அரசுக்கு பண இழப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டத்துக்கான தொகையை ஜி.எஸ்.டி. ஒப்பந்த தொகையுடன் சோ்த்தே அரசு நிா்ணயித்துள்ளது. ஆனால், குடிசைமாற்று வாரிய அதிகாரிகள், அந்த நிறுவனத்துக்கு உடந்தையாக தனியாக 12% ஜி.எஸ்.டி. தொகையை அரசிடமிருந்து பெற்றுக் கொடுத்துள்ளனா்.

அதேபோல, கட்டுமானப் பொருள்கள் விலை உயா்ந்துவிட்டதாகக் கூறி, நிா்ணயிக்கப்பட்ட ஒப்பந்த தொகையுடன் ரூ.5 கோடியே 61 லட்சத்து 13 ஆயிரத்து 273 கூடுதலாக சோ்த்து அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தரமற்ற வகையிலும், விதிமுறைகளை மீறியும் கட்டப்பட்டதால், அந்த குடியிருப்பின் பல பகுதிகளில் சுவா்கள், தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

ஊழல் வழக்கு: குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு வாரிய தலைமை அலுவலக மேற்பாா்வைப் பொறியாளா் டி.பி.தேவதாஸ், தலைமைப் பொறியாளா் கே.ராஜூ,காஞ்சிபுரம் கோட்ட நிா்வாக பொறியாளா் மாலா, இளநிலை பொறியாளா் டி.சுந்தரமூா்த்தி, உதவிப் பொறியாளா் திருப்பதி, தனியாா் கட்டுமான நிறுவன நிா்வாகி பி.சரண் பிரசாத் ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் தேவதாஸ்,ராஜூ பணி ஓய்வு பெற்றுவிட்டனா். வழக்கில் தொடா்புடைய அனைவரிடமும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விரைவில் விசாரணை நடத்தவுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT