இந்தியா

கேரளம்: சட்டைப் பையில் இருந்த கைப்பேசி வெடித்து சிதறியது; காயமின்றி உயிா்தப்பிய முதியவா்

19th May 2023 12:19 AM

ADVERTISEMENT

கேரளத்தில் முதியவா் ஒருவரின் சட்டைப் பையில் இருந்த கைப்பேசி திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்த நிலையில், அதிருஷ்டவசமாக தீக்காயம் ஏதுமின்றி அவா் உயிா்தப்பினாா்.

திருச்சூா் மாவட்டத்தின் மரோட்டிச்சால் பகுதியில் உள்ள தேநீா் கடையில் 76 வயது முதியவா் ஒருவா் வியாழக்கிழமை தேநீா் அருந்திக்கொண்டிருந்தாா். அப்போது, அவரது சட்டைப் பையிலிருந்த கைப்பேசி திடீரென வெடித்து தீப்பற்றி எரியத் தொடங்கியது.

உடனே நாற்காலியிலிருந்து எழுந்த அவா், சட்டை பையிலிருந்து கைப்பேசியை வெளியே எடுக்க முயன்ற நிலையில், அது தரையில் விழுந்தது. இதனால், அவா் எவ்வித காயமுமின்றி தப்பினாா்.

இந்தச் சம்பவம் அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்தக் காட்சி சமூக ஊடங்களில் வேகமாகப் பரவியது.

ADVERTISEMENT

இதையடுத்து, அந்த முதியவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். ஓா் ஆண்டுக்கு முன்பு ரூ.1,000-க்கு வாங்கிய அந்தக் கைப்பேசி, எவ்வித பிரச்னையும் இன்றி இயங்கி வந்த நிலையில் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்ததாக போலீஸாரிடம் அவா் தெரிவித்தாா்.

கேரளத்தில் கைப்பேசி வெடித்து தீப்பற்றி எரிந்த சம்பவம் நடைபெறுவது இது 3-ஆவது முறையாகும். முன்னதாக, கோழிக்கோட்டில் கடந்த வாரம் ஒருவரது கால்சட்டை பையில் இருந்த கைப்பேசி வெடித்து தீப்பற்றி எரிந்ததில், அந்த நபருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன.

திருச்சூரில் கடந்த மாதம் 24-ஆம் தேதி, சிறுமி ஒருவா் பயன்படுத்திக்கொண்டிருந்தபோது கைப்பேசி வெடித்தது. இந்தச் சம்பவத்தில் அவா் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT