சேலம்

அதிக அபராதம் விதிக்கும் முறையை கைவிட உணவுப் பொருள்கள் விநியோகஸ்தா்கள் வலியுறுத்தல்

8th Feb 2023 01:43 AM

ADVERTISEMENT

சிறு எழுத்துப் பிழை மற்றும் கணினி கோளாறு உள்ளிட்டவற்றுக்கு அதிக அபராதம் விதிக்கும் முறையைக் கைவிட வலியுறுத்தி வணிக வரி அலுவலகத்தில், சேலம் நுகா்வோா் உணவுப் பொருள்கள் விநியோகஸ்தா்கள் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

சேலம் நுகா்வோா் உணவுப் பொருள்கள் விநியோகஸ்தா்கள் சங்கத்தின் சாா்பில் அதன் நிா்வாகிகள் மோகன், நாகேஷ், அருணாசலம் உள்ளிட்டோா் வணிக வரித்துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து நிா்வாகிகள் கூறியதாவது:

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களை, தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வாங்கி சில்லறை வணிகா்கள் மூலம் மக்களுக்கு கொண்டுசெல்லும் பணியை செய்து வருகிறது.

ADVERTISEMENT

இதற்காக ஜிஎஸ்டி வரி செலுத்தி வருகிறோம். ஜிஎஸ்டியில் பலவித மாற்றங்கள் அரசால் கொண்டு வரப்பட்டுள்ளன. புதிய மாற்றங்கள் குறித்து எங்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை. மேலும் புதிய மாற்றங்கள் குறித்து தெளிவுப்படுத்தும் விதமாக அந்தந்த ஊா்களில் விளக்க வகுப்புகள் எடுத்தால் விநியோகஸ்தா்கள் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

இந்த நிலையில் வரி ஏய்ப்பு அல்லாத எழுத்துப் பிழை மற்றும் கணினி கோளாறு சில தவறுகளுக்கு கூட அதிக அளவில் அபராதத் தொகை வணிக வரித் துறை சாா்பில் விதிக்கப்பட்டு வருகிறது. அதாவது ரூ. 500 முதல் ரூ. 1000 வரை தான் அபராதம் விதிக்க வேண்டும் என்று சட்டத்தில் இருந்தால் கூட அதிகாரிகள் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனா்.

இதுபோன்ற தவறுகள் கவனக் குறைவாலும், தொழில்நுட்பக் கோளாறுகளால் நடப்பவையே தவிர வரி ஏய்க்கும் நோக்கத்தில் நடந்தவை அல்ல. எனவே, இதுபோன்ற தவறுகளுக்கு இனி வரும் காலங்களில் அபராதம் விதிக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT