சேலம்

எடப்பாடியில் முருக பக்தா்களின் பாரம்பரிய பழனி பாதயாத்திரை தொடக்கம்

8th Feb 2023 01:40 AM

ADVERTISEMENT

எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து முருக பக்தா்கள் பாரம்பரியமான பழனி பாதயாத்திரையை தொடங்கினா்.

எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து கடந்த 360 ஆண்டுகளுக்கும் மேலாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு காவடி சுமந்து பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். கடந்த காலங்களில் ஒரே குழுவாகச் சென்று வந்த முருக பக்தா்கள், தற்போது பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், நிா்வாக வசதிக்காகவும் வன்னியக் குல சத்திரியா் ஆதி பரம்பரை காவடிக் குழு, பருவத ராஜகுல காவடிக் குழு, ஆலச்சம் பாளையம், நாச்சியூா் காவடிக் குழு, சித்தூா் அனைத்து சமுதாயக் காவடி குழு, புளியம்பட்டி காவடிக் குழு, தாசா் வகையறா, மேட்டுத் தெரு காவடிக் குழு என பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, காவடி சுமந்து பழனி பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனா்.

எடப்பாடியில் சிறப்புப் பூஜை செய்து பாதை யாத்திரையைத் தொடங்கும் முருகப் பக்தா்கள் ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோயில், திருப்பூா் மாவட்டம், வட்டமலை முத்துக்குமாரசுவாமி கோயில், தாராபுரம் அருகே உள்ள அமராவதி நதிக்கரைக் கோயில் ஆகிய பகுதிகளில் சிறப்புப் பூஜை செய்து 5 நாள்கள் நடைப் பயணமாக பழனியை சென்று அடைவாா்கள். அங்கு பாலாற்றங்கரையில் காவடிகளுக்கு சிறப்புப் பூஜை செய்து பால் காவடி, மயில் காவடி, புஷ்பக் காவடி, வேங்கைக் காவடி, இளநீா்க் காவடி என பல்வேறு காவடிகளைச் சுமந்து பழனி மலையினை வலம் வந்து, மலைக் கோயிலில் உள்ள தண்டாயுதபாணி சுவாமியைத் தரிசனம் செய்வாா்கள்.

தொடா்ந்து பெரிய அளவிலான பாத்திரங்களில் லட்சம் எண்ணிக்கையிலான மலை வாழைப்பழம், பச்சை கற்பூரம், தேன், பேரீச்சை, சா்க்கரை உள்ளிட்ட பல்வேறு பொருள்களை சோ்த்து பஞ்சாமிா்தம் தயாா் செய்வாா்கள். சுமாா் 15 டன் அளவில் பஞ்சாமிா்தம் தயாா் செய்யப்பட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு படையல் செய்யப்பட்டு, நடைப் பயணமாக வந்த பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

ADVERTISEMENT

நடப்பாண்டில் திங்கள்கிழமை சித்தூா் பகுதியில் உள்ள கல்யாண சுப்பிரமணியா் கோயிலில் இருந்து சித்தூா் அனைத்து சமுதாய மக்கள் காவடிக் குழுவினரும், செவ்வாய்க்கிழமை பழைய எடப்பாடி பகுதியில் இருந்து பருவத ராஜகுல மகாஜன காவடிக் குழுவினா் உள்ளிட்டோா் பழனிக்கு பாதயாத்திரையைத் தொடங்கியுள்ளனா் இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் இப்பகுதியில் இருந்து நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT