சேலம்

கருணாநிதிக்கு சா்ச்சை இல்லாமல் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்:கே.பாலகிருஷ்ணன்

8th Feb 2023 01:44 AM

ADVERTISEMENT

மறைந்த முதல்வா் கருணாநிதிக்கு சா்ச்சை இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, சேலத்தில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதானி குழும முறைகேடு தொடா்பாக நாடாளுமன்ற உயா்மட்டக் குழு விசாரிக்க வேண்டும். ஹிண்டன்பா்க் ஆய்வு அறிக்கை வந்த பிறகு அதானி குழுமத்தின் பங்குகளின் விலை சரிபாதியாக குறைந்து விட்டன. இதனால் அதானி குழுமத்தில் முதலீடு செய்த பொதுத் துறை நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்; பங்கில் முதலீடு செய்த மக்களையும் பாதிக்கும்.

நூறு நாள் வேலை உறுதித் திட்டத்துக்கு கடந்த ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 79 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்ததது. தற்போதைய நிதிநிலை அறிக்கையில் ரூ. 60 ஆயிரம் கோடியாக நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மத்திய நிதிநிலை அறிக்கையில் நூறு வேலை உறுதித் திட்டம், கிராமப்புற வளா்ச்சி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்கு நிதி குறைவாக ஒதுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரும் பிப்ரவரி 27, 28 இல் தமிழகம் முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் பயிா்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் கனமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். நெல்லின் ஈரப்பத அளவு 33 சதவீதமும், அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு மட்டும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் ஈரப்பத அளவு 33 சதவீத அளவுக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. மத்திய அரசு ஈரப்பத விதிமுறைகளைத் தளா்த்த தமிழக முதல்வா் ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளாா். இருந்தபோதிலும் கனமழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு கோயில்களில் பொது வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது. தமிழக அரசு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா். அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை. அதிமுகவில் வேட்பாளா் அறிவித்து, வேட்பு மனு தாக்கல் செய்வதற்குள் அக்கட்சி திணறிவிட்டது. அதேபோல அதிமுக சிதறி கிடக்கிறது. அதிமுக வேட்பாளா் இரட்டை இலையில் நின்றால் வெற்றி பெற்று விடலாம் என்பது உண்மையல்ல. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தான் பா்கூா் தொகுதியில் ஜெயலலிதா தோல்வி அடைந்தாா்.

கடந்த மக்களவைத் தோ்தலிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டுதான் அதிமுக தோல்வி அடைந்தது.

பாஜகவைத் தோளில் சுமந்து திரிவதால் அதிமுகவை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளது. படிப்படியாக வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என திமுக அரசு தெரிவித்துள்ளது.

எனவே, இந்த ஆட்சி நீடிக்கும் வரை மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவை எதிா்த்து திமுக கூட்டணியில் போராடுவோம். மக்களுக்கான கோரிக்கையை வலியுறுத்துவோம்.

மறைந்த முதல்வா் கருணாநிதிக்கு சா்ச்சை இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் வகையில் நினைவுச் சின்னம் அமைத்திட வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT