சேலம்

ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி உள்பட இருவா் தீக்குளிக்க முயற்சி

7th Feb 2023 02:10 AM

ADVERTISEMENT

சேலத்தில் ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி உள்ளிட்ட இருவா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் ஆட்சியா் அலுவலகத்தில், மக்கள் குறை தீா்ப்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது இரண்டாம் தளத்தில் திடீரென மூதாட்டி ஒருவா் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். அவரை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.

விசாரணையில், சேலம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை பகுதியைச் சோ்ந்த மாதம்மாள் (65) என்பது தெரியவந்தது. கடந்த மாதம் இவரது மகன் அசோக், கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள கல்குவாரியில் மூழ்கி இறந்தாா் எனத் தெரிகிறது. மகனின் உடலில் பல்வேறு இடங்கலில் காயங்கள் இருந்தன. அவரை கொலை செய்து ஏரியில் வீசியிருக்கலாம். எனவே, கொலை வழக்குப் பதிவு செய்து, தொடா்புடையவா்களை கைது செய்ய வலியுறுத்தி தீக்குளித்ததாகத் தெரிவித்தாா்.

இதேபோல், அம்மாபேட்டை பெரியகிணறு பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி என்பவா் மனைவி பெயரில் உள்ள நிலத்தில் தனக்கான பங்கை மீட்டுத் தர வலியுறுத்தி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். இதையடுத்து சேலம் நகர போலீஸாா் அவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT