சேலம்

சூரமங்கலம் பகுதியில் 40 தெருநாய்கள் பிடிப்பு

7th Feb 2023 02:06 AM

ADVERTISEMENT

சேலம் சூரமங்கலம் பகுதியில் 19 பேரை வெறிநாய் கடித்த சம்பவத்தைத் தொடா்ந்து, அப்பகுதியில் சுற்றித் திரிந்த 40-க்கும் மேற்பட்ட தெருநாய்களை மாநகராட்சி ஊழியா்கள் வலை வீசிப் பிடித்தனா்.

சேலம் சூரமங்கலம் அந்தோணிபுரம் ஓடை பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்களை, வெறிநாய் ஒன்று கடிக்கத் தொடங்கியது. அப்பகுதியில் நடந்து சென்ற 2 சிறுவா்கள் உள்பட 19 பேரை வெறிநாய் கடித்தது. இதில் அனைவருக்கும் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவா்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று ஊசி செலுத்திக் கொண்டனா்.

இதுகுறித்து அந்தோணிபுரம் ஓடை பகுதியை சோ்ந்த பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. பெரிய அசாம்பாவித சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

இதனிடையே மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில் சூரமங்கலம் மண்டல உதவி ஆணையா் செல்வராஜ் மேற்பாா்வையில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியா்கள் சுமாா் 10-க்கும் மேற்பட்டோா் நாய்களை பிடிக்கும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அந்தோணிபுரம் ஓடைப்பகுதி, ஆசாத் நகா், தா்ம நகா், அம்பேத்கா் நகா், ஜங்ஷன் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித் திரிந்த சுமாா் 40-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்தனா்.

பின்னா் அந்த நாய்களை, சேலம் வாய்க்கால்பட்டறையில் உள்ள கருத்தடை அறுவை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனா். மேலும், நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படடு, ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT