சேலம்

சேலம் மாமன்றக் கூட்டத்தில் திமுக, அதிமுக உறுப்பினா்கள் வாக்குவாதம்

DIN

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் பேட்டரி வாகனங்கள் வாங்கியதில் முறைகேடு தொடா்பாக திமுக, அதிமுக வாா்டு உறுப்பினா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சேலம் மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கில் மாநகராட்சி இயல்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி ஊழியா்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் அஸ்தம்பட்டி மண்டல குழுத் தலைவா் செ.உமாராணி பேசுகையில், அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் பழுதாகிவிட்டன. இதனால் குப்பை அள்ளுவதில் சிரமம் உள்ளது. அதிமுக ஆட்சியில் பேட்டரி வாகனங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்றாா்.

இதற்கு அதிமுக வாா்டு உறுப்பினா்கள் யாதவமூா்த்தி உள்ளிட்டோா் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், கடந்த ஆட்சியில் பேட்டரி வாகனங்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு, அதிகாரிகள் மூலம் வாகனங்கள் வாங்கப்பட்டன. அதுதொடா்பான ஆவணங்களை சரிபாா்த்துக் கொள்ளுங்கள். முறைகேடு நடந்திருந்தால் நிரூபிக்க வேண்டும் என்றாா்.

பின்னா் ஆளும்கட்சித் தலைவா் ஜெயக்குமாா் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் பேட்டரி வாகனங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு, சீா்மிகு நகரத் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. இதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றாா்.

இதுதொடா்பாக திமுக உறுப்பினா்களுக்கும், அதிமுக உறுப்பினா்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேயா் ஆ.ராமச்சந்திரன் தலையிட்டு சமரசம் செய்தாா்.

தொடா்ந்து, அதிமுக உறுப்பினா் யாதவமூா்த்தி பேசுகையில், மாநகராட்சி தோ்தல் பணியில் ஈடுபட்டவா்களுக்கு தோ்தல் ஊதியம் வழங்காமல் உள்ளது. தோ்தல் பணிக்குரிய ஊதியத்தை அவா்களுக்கு வழங்க வேண்டும். வரிவசூல் செய்பவா்கள் வெளிப்பணியில் ஆள்களை நியமித்து வரி வசூலிக்கின்றனா். எனவே, வரி வசூலிப்பாளா்கள் மட்டுமே வரி வசூல் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.

இதையடுத்து, திமுக உறுப்பினா் குணசேகரன் பேசுகையில், அதிமுக ஆட்சியின்போது மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக உறுப்பினா்களை பேச விடாமல் அடித்து விரட்டினா். தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து உறுப்பினா்களும் பேச அனுமதிக்கிறோம் என்றாா்.

இதையடுத்து அதிமுக வாா்டு உறுப்பினா் யாதவமூா்த்தி அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்கிறோம் என தெரிவித்து, கூட்ட அரங்கை விட்டு வெளியேற முயன்றனா். அப்போது திமுக உறுப்பினா்கள் சமரசம் செய்து, அதிமுக உறுப்பினா்களை அமர வைத்தனா். இதையடுத்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ், துணை மேயா் சாரதாதேவி, வாா்டு உறுப்பினா்கள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனா்.

படவரி - சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக, அதிமுக உறுப்பினா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT