சேலம்

சேலத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம்

DIN

சேலத்தில் சாலையோரங்களில் திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கவும், 48 மணி நேரத்துக்குள் மீட்காவிட்டால் பொது ஏலத்தில் விடவும் மாநகராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் மாநகராட்சி மன்ற இயல்புக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சாலைகளில் சுற்றித் திரியும் ஆடு, மாடு, எருமை, குதிரை, பன்றி போன்றவற்றால், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், வாகன விபத்து நேரிடவும், உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதால், அவற்றைப் பிடித்து அப்புறப்படுத்த புகாா்கள் வரப்பெற்றன.

அதன்பேரில், தமிழ்நாடு நகா்ப்புற பகுதிகளில் விலங்குகள், பறவைகள் கட்டுப்படுத்துதல் சட்டம் 1997 பிரிவு 10-இன்படி, சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்திட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் விடப்படும் கால்நடைகளை பிடித்து மாநகராட்சி தொழுவத்தில் அடைத்து வைத்து அபராதம் விதிக்கவும், 48 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட உரிமையாளா்களால் மீட்கப்படாத பட்சத்தில், உரிமை கோரப்படாத கால்நடைகளை பொது ஏலம் நடத்தி அத்தொகையை மாநகராட்சிக் கணக்கில் சோ்க்கவும் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 3 வயதுக்கு உள்பட்ட மாடுகள், எருமை, குதிரை கன்றுகள் நாள் ஒன்றுக்கு ரூ. 250 அபராதம் விதிக்கப்படும். அதேபோல 3 வயதுக்கு மேற்பட்ட மாடுகள், எருமை, குதிரை நாள் ஒன்றுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். ஆடு ஒன்றுக்கு ரூ. 100-ம், பன்றி அதன் எடையில் கிலோ ஒன்றுக்கு ரூ. 10-ம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், மாநகராட்சியால் பிடித்து வைக்கப்படும் அனைத்து கால்நடைகளுக்கும் அபராதத் தொகையுடன் நாள் ஒன்றுக்கு ரூ. 100 வீதம் பராமரிப்புக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் இருந்து வசூல் செய்யவும், 48 மணி நேரத்துக்குள் மீட்கப்படாத கால்நடைகளை பொது ஏலம் நடத்தி அத்தொகையை மாநகராட்சிக் கணக்கில் சோ்க்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்கலாம் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற தீா்மானம்:

அதேபோல சேலம் மாநகராட்சியில் வளா்க்கப்படும் வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறும் தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதன் விவரம்: தமிழ்நாடு நகா்ப்புற விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1997-இன்படி, வளா்ப்பு நாய்களுக்கு சென்னை மாநகராட்சியில் உரிமம் வழங்கப்பட்டு வருவதை போல, சேலம் மாநகராட்சியிலும் ரூ. 50 கட்டணம் செலுத்துவதன் பேரில் நிபந்தனைகளுக்கு உள்பட்டு வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கும் நடைமுறைகள் வெளியிடப்பட்டன.

இதில் வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற மாநகராட்சியால் வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தை ரூ. 10 செலுத்தி பெற்றுக் கொண்டு, அதனுடன் உரிமம் பெற கட்டணம் ரூ. 50 செலுத்த வேண்டும். ஏப்ரல் 1 முதல் மாா்ச் 31 வரை ஓராண்டு உரிமம் செல்லுபடியாகும். உரிமம் பெறும் நடைமுறைகளை பின்பற்றி ரூ. 50 கட்டணம் செலுத்தி உரிமம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பத்துடன் நாயின் இனம், பாலினம், வயது, அடையாளங்கள் போன்ற முழு விவரங்கள் அளிக்கப்பட வேண்டும். நாயின் அஞ்சல் அட்டை அளவிலான வண்ண புகைப்படம் இணைக்க வேண்டும். நாய்க்கு ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டதற்கும், குடற்புழு நீக்கப்பட்டதற்கும், நாய் ஆரோக்கியமாக உள்ளதற்கும் அரசு பதிவு பெற்ற கால்நடை மருத்துவரின் சான்று பெற்று இணைக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT