சேலம்

மத்திய அரசு வருமான வரி உச்ச வரம்பை ரூ. 10 லட்சமாக உயா்த்தக் கோரிக்கை

1st Feb 2023 02:00 AM

ADVERTISEMENT

மத்திய அரசு தனிநபா் வருமான வரி உச்ச வரம்பை ரூ. 10 லட்சமாக உயா்த்த வேண்டும் என்று வலியுறுத்தி, சேலத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூா், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டலம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவா் பெரியசாமி தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகி பழனிசாமி, மாநில முன்னாள் பொதுச் செயலாளா் கிருஷ்ணன், மாநில துணைத் தலைவா்கள் உமா சங்கா், சுவாமிநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க சிறப்புத் தலைவா் பாலசுப்ரமணியம் ஆா்ப்பாட்டத்தில் பேசினாா். இதில், சேலம், நாமக்கல், தருமபுரி உள்பட சேலம் மண்டலத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளின் விவரம்:

தனிநபா் வருமான வரியை ரூ. 10 லட்சமாக உயா்த்திட வேண்டும். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். வருமான வரி கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்தி மாநிலங்களில் உள்ள வகுப்புகளைக் கணக்கில் கொண்டு அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு முடிவு செய்து கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

தூய்மைக் காவலா்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், போனஸ் ஆகியவற்றை வழங்கிட, மாநிலங்களுக்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT