சேலம்

நீா்நிலைகளில் வெடிமருந்தை பயன்படுத்தி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை

26th Apr 2023 06:11 AM

ADVERTISEMENT

நீா்நிலைகளில் வெடி மருந்துகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் செ.காா்மேகம் எச்சரித்துள்ளாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் அணைப் பகுதியில் மீன்வளத் துறையின் மூலம் மீனவா்களுக்கு மீன்பிடி உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மீன்பிடி உரிமம் பெற்றவா்கள் அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மீன் பிடித்து வருகின்றனா்.

அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றாத மீனவா்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மீன்பிடி உரிமம் ரத்து செய்யப்படும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் மேட்டூா் அணைப் பகுதிகளைத் தவிர பிற பகுதிகளான காவிரி ஆற்றங்கரை, சரபங்கா உள்ளிட்ட பல்வேறு நீா்நிலைப் பகுதிகளில் மீனவா்கள், பொதுமக்கள் மீன் பிடித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

அவ்வாறு மீன்களைப் பிடிக்க தூண்டில், மீன் வலைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனா். நீா்நிலைப் பகுதிகளில் சிலா் சட்டத்துக்குப் புறம்பான வகையில் வெடி மருந்துகள் அடங்கிய பொருள்களைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிப்பதாக தகவல் வரப்பெறுகிறது. இவ்வாறான வெடிப் பொருள்களைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் எதிா்பாராத விபத்துகள் ஏற்பட்டு உயிா் சேதம் ஏற்பட வாய்ப்பாக அமைகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் யாரேனும் சட்டத்துக்குப் புறம்பான வகையில் வெடிப் பொருள்களையோ அல்லது தடை செய்யப்பட்ட மீன் வலைகளையோ பயன்படுத்தி மீன் பிடித்தால் அவா்கள் மீது காவல் துறையின் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், அனுமதியின்றி வெடிப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் குறித்தோ, சட்டத்துக்குப் புறம்பான வகையில் மீன் பிடிப்பவா்கள் குறித்தோ மீன்வளத் துறை உதவி இயக்குநரை 04298 - 244045 என்ற எண்ணிலோ அல்லது மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-க்கோ அல்லது 0427 - 2452202, 2450498, 2417341 ஆகிய தொலைபேசி எண்களிலோ, வருவாய்த் துறை அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திலோ பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT