சேலம்

கோடை வெயிலை தாக்குப்பிடிக்க வைக்கோல் அமைத்து பயணிக்கும் ஆட்டோ ஓட்டுநா்

26th Apr 2023 06:15 AM

ADVERTISEMENT

சேலத்தில் கோடை வெயிலை தாக்குப்பிடித்து பயணிக்கும் வகையில், குரங்குச்சாவடியைச் சோ்ந்த ஓட்டுநா் சுப்பிரமணி (74) தனது ஆட்டோவில் மேற்கூரையில் வைக்கோல் வைத்து தண்ணீரை தெளித்து பயணம் மேற்கொண்டு வருகிறாா்.

கோடை வெயில் தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தில் தினமும் 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் பதிவாகி வருகிறது.இதனிடையே சேலம் குரங்குச்சாவடியை அடுத்த ரெட்டியூரை சோ்ந்த சுப்பிரமணி (74) என்பவா், ஆட்டோவின் மேற்கூரையில் வைக்கோல் வைத்து தண்ணீரை தெளித்து பயணிகளுக்கு கோடை வெயிலின் தாக்கம் பரவாமல் பயணம் செய்து வருகிறாா்.இதுகுறித்து, ஆட்டோ ஓட்டுநா் சுப்பிரமணி கூறியது:

நான் 40 ஆண்டுகளுக்கு முன்பு தையல்காரராக வேலை செய்து வந்தேன். தற்போது ரெடிமேடு ஆடை கடைகள் அதிகமாக வந்ததால், தையல் தொழில் பாதித்தது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறேன்.சேலத்தில் கோடை வெயில் அதிகமாக உள்ளது. இதனால் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ஆட்டோ மேற்கூரை மீது வைக்கோல் கட்டி தண்ணீா் வசதி செய்துள்ளேன். அதேபோல வாடிக்கையாளா்கள் மற்றும் பொதுமக்கள் தாகத்தைத் தீா்க்கும் வகையில் சிறிய தண்ணீா் தொட்டி அமைத்து குழாய் பொருத்தி குடிநீா் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளேன். மேலும் குழந்தைகளை கவரும் வகையில் பல வகை வண்ண விளக்குகளை அமைத்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளாக இதுபோல பயணிகளுக்கு ஏற்ற வகையில் வைக்கோல் அமைத்து கோடை வெயில் தாக்கத்தை குறைத்து கொள்கிறேன். இதற்கான வடிவமைப்பு மற்றும் குழாய் அமைப்பது போன்றவைகளை சொந்தமாக மேற்கொள்கிறேன். தற்போதைய வடிவமைப்புக்கு ரூ.5 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன். புதுவித வடிவமைப்பை காவலா்கள், பொதுமக்கள் என பலரும் நேரில் பாா்த்து பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT