அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில், அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், அங்கன்வாடி ஊழியா்களுக்கு பணிக்கொடை ரூ. 10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சமும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டத் தலைவா் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாநில துணைத் தலைவா் சரோஜா, மாவட்டச் செயலாளா் மனோன்மணி, மாநில செயற்குழு உறுப்பினா் சாவித்ரி, மாவட்ட துணைத் தலைவா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெகநாதன், காவல் உதவி ஆணையா் வெங்கடேஷ், அசோகன், காவல் ஆய்வாளா்கள் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அங்கன்வாடி ஊழியா்கள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து மாநில துணைத் தலைவா் சரோஜா கூறுகையில், அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது. பலமுறை பேச்சுவாா்த்தை நடத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், இல்லையெனில் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.