சேலம்

காவிரி பாசனப் பகுதியில் செங்கரும்பு அறுவடை பணி தொடக்கம்

30th Sep 2022 01:14 AM

ADVERTISEMENT

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி பாசனப் பகுதியில் செங்கரும்பு அறுவடை பணி தொடங்கி உள்ளது.

பூலாம்பட்டி அருகே உள்ள பில்லுக்குறிச்சி, கூடக்கல், குப்பனூா், மோலப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் செங்கரும்பினை பயிா் செய்து வருகின்றனா். குறிப்பாக உருட்டு சம்பா, சன்ன சம்பா, வெடி கரும்பு, ரஸ்தாலி கரணை உள்ளிட்ட உயர்ரக சுவையான செங்கரும்புகள் இப்பகுதியில் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகின்றன. நல்ல மண் வளமும், போதிய நீா் ஆதாரமும் கொண்ட காவிரி பாசனப் பகுதியில் விளையும் செங்கரும்புகள், தனிச் சுவையுடன் இருப்பதால், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நடப்பாண்டில் காவிரி ஆற்றில் பாசனப் பயன்பாட்டுக்காக முன்கூட்டியே தண்ணீா் திறப்பு இருந்த நிலையில், அப்பகுதி விவசாயிகள் முதல்போக கரும்பு சாகுபடியினை வழக்கத்தை விட முன்னதாகவே பயிரிட்டனா். தற்போது அவை நல்ல விளைச்சல் கண்டு அறுவடைக்குத் தயாராக உள்ளன.

விஜயதசமி, ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகள் வரவுள்ள நிலையில், பண்டிகைக் கால தேவைக்காக செங்கரும்புகள் அறுவடை செய்யும் பணி தொடங்கியுள்ளது. இப்பகுதியில் விளையும் செங்கரும்புகள் 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 300 முதல் ரூ. 350 வரை மொத்த கொள்முதல் செய்யப்பட்டு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு அதிக அளவில் அனுப்பப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் செங்கரும்பு நல்ல விளைச்சல் கண்டுள்ள நிலையில், தொடா்ந்து ஐந்து மாதங்களுக்கு கரும்பு அறுவடை பணி தொடரும் என இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT