சேலம்

நாளை தாரமங்கலத்தில் வட்டார இளைஞா் திறன் விழா

30th Sep 2022 01:15 AM

ADVERTISEMENT

தாரமங்கலம் வட்டாரத்தில் அக். 1-ஆம் தேதி வட்டார அளவிலான இளைஞா் திறன் திருவிழா நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்தி:

சேலம் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (மகளிா் திட்டம்) மூலம் தாரமங்கலம் வட்டாரத்தில் அக். 1-ஆம் தேதி வட்டார அளவிலான இளைஞா் திறன் திருவிழா நடைபெற உள்ளது. இதில், அரசு துறைகளின் மூலம் பல்வேறு பயிற்சிகளுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளது.

இம்முகாமானது ஓமலூா் பிரதான சாலை, தாரமங்கலம் செங்குந்தா் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

ADVERTISEMENT

இம்முகாமில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள படித்த, படிக்காத, ஆண், பெண் இருபாலரும் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான கட்டணமில்லா பயிற்சிகளை தோ்வு செய்து பிரபல தனியாா் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறலாம்.

பயிற்சிக் காலத்தில் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள், பயிற்சி கையேடு, சீருடை, ஆங்கில அறிவு பயிற்சி மற்றும் இதர மதிப்புக்கூட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சியின் நிறைவில் தனியாா் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்.

எனவே, தாரமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞா்கள் இளைஞா் திறன் திருவிழாவில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 96298 11700, 96590 31180 மற்றும் 0427 - 2411552 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT