சேலம்

பயன்பாட்டுக்கு வரும் கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டம்

30th Sep 2022 01:11 AM

ADVERTISEMENT

கைக்கான் வளைவு வாய்க்கால் அமைக்கும் திட்டப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி, 2 மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்பதால் கல்வராயன்மலை கரியக்கோயில் அணைப்பாசன மற்றும் ஆற்றுப்படுகை கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சேலம் மாவட்டம், கல்வராயன் மலையின் வடமேற்கு பகுதியில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதியின் முக்கிய உபநதியான கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே, கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், இரு மலைக்குன்றுகளுக்கு இடையே கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.

இந்த அணை மூலம் பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 3,600 ஏக்கா் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன.

சேலம் மாவட்ட எல்லையிலுள்ள கைக்கான் வளைவு நீரோடையில் இருந்து 500 மீ. தொலைவுக்கு கால்வாய் அமைத்து, மழைக்காலத்தில் உபரியாக செல்லும் தண்ணீரை கரியக்கோயில் நீரோடையில் திருப்பி விட்டு கரியக்கோயில் அணையை நிரப்புவதற்கு வழிவகை செய்ய வேண்டுமென, கடந்த 10 ஆண்டுகளாக அணைப்பாசன விவசாயிகள், ஆற்றுப்படுகை கிராம விவசாயிகள், ஆறு, ஏரிப்பாசன விவசாயிகள் தமிழக அரசுக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், கரியக்கோயில் ஆற்றை நீராதாரமாக கொண்டுள்ள ஆற்றுப்பாசன அணைக்கட்டுகள் மற்றும் ஏரிகள் மூன்றில் ஒரு பங்கு நிரம்பிய பிறகே, கரியக்கோயில் ஆற்றில் வரும் நீரை அணையில் தேக்கி வைக்க வேண்டுமென ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் சென்னை உயா்நீதி மன்றத்தில் முறையிட்டு கடந்த 2018 ஜனவரி 18-ஆம் தேதி ஆணை பெற்றனா்.

இந்த அரசாணையை செயல்படுத்தும் விதத்தில், 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து கரியக்கோயில் ஆற்றில் வரும் தண்ணீரை முதல் கட்டமாக அணையில் தேக்குவதை தவிா்த்து, ஆற்றுப்படுகை அணைக்கட்டு மற்றும் ஏரிகளுக்காக ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இந்நிலையில், கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டம் குறித்து அறிக்கை தயாரித்து சமா்பித்த பொதுப்பணித் துறை நீா்வள ஆதார அமைப்பு பிரிவு அதிகாரிகள், இரு ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தனா்.

இதனையடுத்து, கைக்கான் வளைவு காட்டாறு நீரோடையில் இருந்து 500 மீ. தொலைவுக்கு கால்வாய் அமைத்து கரியக்கோயில் நீரோடை வழியாக அணைக்கு தண்ணீரை கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த, அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்தது.

இத்திட்டத்துக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுத்து நிலத்தை கையகப்படுத்துதல், வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ. 7.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2021 பிப்ரவரி மாதத்தில் இருந்து 2 ஆண்டுகளாக வாய்க்கால் அமைக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கைக்கான் வளைவு நீரோடையில் தடுப்பணையும், தலைமை மதகு அமைக்கும் பணிகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளின் நலன்கருதி, கைக்கான் வளைவு நீரோடையால் நீா்வரத்து பெறும் கச்சிராப்பாளையம் கோமுகி அணை நிரம்பிய பிறகு, கைக்கான் வளைவு நீரோடையில் இருந்து, புதிய வாய்க்கால் வாய்க்கால் வழியாக, சேலம் மாவட்டத்திலுள்ள கல்வராயன்மலை கரியக்கோயில் அணைக்கு தொடா்ந்து 10 நாள்களுக்கு தண்ணீா் திருப்புவதற்கு நீா்பங்கீட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால், மழைக்காலத்தில் நாளொன்றுக்கு 50 கன அடி வரை கரியக்கோயில் அணைக்கு கூடுதல் தண்ணீா் கிடைக்கும்.

10 ஆண்டுகால கோரிக்கையான கைக்கான் வளைவு கால்வாய் திட்டம் பயன்பாட்டுக்கு வருவதால், ஆண்டுதோறும் கரியக்கோயில் அணை நிரப்புவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கரியக்கோயில் ஆற்றில் ஆண்டு முழுவதும் நீா்வரத்தும் வெள்ளப்பெருக்கும் ஏற்படும். இதனால், நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து ஆண்டு முழுவதும் பாசன வசதி கிடைக்கும் என்பதால், கரியக்கோயில் அணை வாய்க்கால் பாசனம் மற்றும் ஆறு ஏரிப்பாசன விவசாயிகள் மட்டுமின்றி 50-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT