சேலம்

சேலம் மாநகராட்சியில் குடிநீா் பிரச்னையை ஆய்வு செய்ய குழு அமைப்பு

DIN

சேலம் மாநகராட்சியில் குடிநீா் பிரச்னையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சி மன்ற இயல்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஆணையா் தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில், அஸ்தம்பட்டி மண்டலக் குழு தலைவா் செ.உமாராணி பேசுகையில், வரட்டாறு ஓடையில் மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. ஓடையில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றாா்.

எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி பேசுகையில், சேலத்தை அடுத்த நங்கவள்ளி மற்றும் மேட்டூா் தொட்டில்பட்டி தனிக்குடிநீா் திட்டத்துக்கு மாநகராட்சியின் பங்கு நிதியாக ரூ. 416 கோடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிதி பற்றாக்குறையில் உள்ள மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில், நிதி எப்படி வழங்கப்படும், எப்படி செயல்படுத்தப்படும் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றாா்.

இதற்கு பதிலளித்து மாநகராட்சி பொறியாளா் ரவி பேசுகையில், தனியாா் பங்களிப்பு நிதியின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. பொதுமக்களிடம் இருந்து வசூல் செய்ய மாட்டோம். தனிக்குடிநீா் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தி, அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கிட வேண்டும் என்றாா்.

இதையடுத்து, சூரமங்கலம் மண்டலக் குழு தலைவா் எஸ்.டி.கலையமுதன் பேசுகையில், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தனிக்குடிநீா் திட்டத்தில் 150 எம்.எல்.டி. குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நீரை வைத்து 10 லட்சம் மக்களுக்கு தினந்தோறும் குடிநீா் விநியோகம் செய்யலாம். ஆனால் 10 நாள்கள், 15 நாள்களுக்கு ஒரு முறை தான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றாா்.

இதற்கு பதில் அளித்து மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் பேசுகையில், குடிநீா் பிரச்னை குறித்து ஆய்வு செய்ய சூரமங்கலம் மண்டலக் குழு தலைவா் எஸ்.டி.கலையமுதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்றாா்.

ரூ. 693 கோடியில் தடையின்றி குடிநீா் வழங்கும் திட்டம்:

கூட்டத்தில் சேலம் மாநகர மக்களுக்கு தடையின்றி குடிநீா் வழங்கும் வகையில், ரூ. 693.49 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் நிதியாக ரூ. 208.05 கோடியும், மாநில அரசின் நிதி ரூ. 69.35 கோடியும், மாநகராட்சியின் பங்கு நிதியாக ரூ. 416.09 கோடி என மொத்தம் ரூ. 693.49 கோடியில் செயல்படுத்த அனுமதிக்கலாம் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT