சேலம்

கனிம அறக்கட்டளை நிதி மேலாண்மைக் குழு ஆலோசனைக் கூட்டம்

29th Sep 2022 01:45 AM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி மேலாண்மைக் குழு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதுதொடா்பாக, ஆட்சியா் செ.காா்மேகம் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் உத்தரவின்படி சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்களை மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி மேலாண்மை குழுவின் உறுப்பினா்களாகக் கொண்டு கூட்டம் நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் கனிம அறக்கட்டளை நிதியை எவ்வாறு பயன்படுத்துவது தொடா்பாக குழு உறுப்பினா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில், ரூ. 20.26 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட 19 துறைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, இந்த நிதியானது குடிநீா், கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு, சூழலியல், சுகாதாரம், பள்ளி வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம் மற்றும் கழிப்பறைகள் அமைப்பதற்கும், திறன் மேம்பாடு, பெண்கள், குழந்தைகள், முதியோா் மற்றும் ஊனமுற்றோா் நலன் ஆகியவற்றுக்கு 60 சதவீத அளவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 40 சதவீதம் நீா் மேலாண்மை, உள்கட்டமைப்பு, எரிசக்தி மேம்பாடு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சீ.பாலச்சந்தா், மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி மேலாண்மைக் குழுவின் உறுப்பினா்கள் எம்எல்ஏ-க்கள் ஆா்.ராஜேந்திரன், இரா.அருள், எஸ்.சதாசிவம், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் துணை இயக்குநா் ஜெயந்தி, வருவாய் கோட்டாட்சியா் சி.விஷ்ணுவா்த்தினி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT