சேலம்

காந்தி பிறந்த நாள்: அக். 12-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே பேச்சுப் போட்டி

29th Sep 2022 01:45 AM

ADVERTISEMENT

காந்தி பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

தமிழ் வளா்ச்சித் துறையின் 2021-22-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் காந்தி, நேரு, அம்பேத்கா், பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

2022-2023-ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் அக். 12-ஆம் தேதி காந்தி பிறந்த நாள் பேச்சுப் போட்டி கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்களுக்கு சேலம் அரசு கலைக் கல்லூரியில் (இருபாலா்) காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

பள்ளிகளில் நடைபெறும் காந்தி பிறந்த நாள் பேச்சுப் போட்டியானது அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தேசமென்று பெயா் சொல்லுவோம் என்ற தலைப்புகளிலும், கல்லூரிகளில் நடைபெறும் பேச்சுப் போட்டியானது வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும், காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம்மதம், காந்தியடிகளின் வாழ்க்கையிலே இமயம் முதல் குமாரிவரை என்ற தலைப்புகளிலும் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றிபெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ. 5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழும், அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ. 2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் ஒரு பள்ளிக்கு, ஒரு கல்லூரிக்கு 2 போ் வீதம் போட்டியில் கலந்துகொள்ள பள்ளித் தலைமையாசிரியா், கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் அக். 12 சேலம் அரசு கலைக் கல்லூரியில் (இருபாலா்) காலை 8.30 மணிக்கு தங்கள் வருகையைப் பதிவுசெய்து முறையாக போட்டியில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT