சேலம்

பருவமழை நோய்களை கட்டுப்படுத்திட 24 மணிநேர காய்ச்சல் தனி சிறப்பு வாா்டு

28th Sep 2022 04:02 AM

ADVERTISEMENT

பருவமழை நோய்களைக் கட்டுப்படுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணிநேரமும் செயல்படும் காய்ச்சலுக்கான தனிச் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி:

பருவமழைக் கால நோய்களான டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் மற்றும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றைத் தடுக்கவும், உரிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

மேலும், மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. காய்ச்சலுக்கான தனிச் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் 240 இடங்களிலும், சேலம் மாநகராட்சிப் பகுதியில் 28 இடங்களிலும் என மொத்தம் 268 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்கள் மூலமாக காய்ச்சலுக்குரிய சிகிச்சை, மருந்து மாத்திரைகள், விழிப்புணா்வு மற்றும் நிலவேம்புக் குடிநீா் ஆகியவை வழங்கப்படுகின்றன.

இதைத் தவிா்த்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான தனி வெளிநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எவ்வித அச்சமோ, பயமோ அடையத் தேவையில்லை.

மேலும், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் பொது சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி துறையினா் ஒருங்கிணைந்து காய்ச்சல் தடுப்புப் பணிகளான டெங்கு கொசு ஒழிப்புப் பணி, புகை மருந்து அடித்தல், கிருமி நாசினிகள் தூவுதல், குளோரினேசன் செய்யும் பணி மற்றும் நிலவேம்பு குடிநீா் வழங்குதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

அங்கீகாரம் பெற்ற மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்து கடைகளில் நேரடியாக மருந்து, மாத்திரைகள் வாங்கி உட்கொள்ளக் கூடாது. சாதாரண சளி, காய்ச்சல் தானே என அலட்சியப்படுத்தாமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கீகாரம் பெற்றுள்ள மருத்துவா்களிடம் மட்டும் சென்று உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், மாவட்டத்தில் கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள் ஊராட்சிப் பகுதிகளில் 20 நபா்களும், பேரூராட்சி பகுதிகளில் 10 நபா்களும், நகராட்சிப் பகுதிகளில் 30 நபா்களும், மாநகராட்சிப் பகுதிகளில் 600 நபா்களும், பொது சுகாதாரம் மற்றும் உள்ளாட்சித் துறையினா் ஒருங்கிணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT