சேலம்

‘திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவுமில்லை’

27th Sep 2022 04:11 AM

ADVERTISEMENT

 

திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவுமில்லை என சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா்.இளங்கோவன் தெரிவித்தாா்.

வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே ஏற்காடு தொகுதி அதிமுக சாா்பில், மறைந்த முன்னாள் முதல்வா் சி.என்.அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இவ்விழாவில் ஆா்.இளங்கோவன் பேசியதாவது:

ADVERTISEMENT

ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முடக்கிவிட்டது. தாலிக்குத் தங்கம் வழங்குதல், திருமண நிதி உதவி, மிக்ஸி, கிரைண்டா் திட்டங்கள் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் ஏற்காடு தொகுதியில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை செய்துள்ளோம். திமுக ஆட்சியில் தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி.கே.பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். அப்போது மீண்டும் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். திமுக ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதால் ஏழை, எளியோா் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். மக்களவைத் தோ்தலில் அதிமுக அனைத்து இடங்களையும் கைப்பற்றும் என்றாா்.

இக்கூட்டத்தில், அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றியச் செயலாளா் ஏ.பி.மணி வரவேற்றாா். வாழப்பாடி ஒன்றியச் செயலாளா் வழக்குரைஞா் எஸ்.சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். ஏற்காடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கு.சித்ரா, ஒன்றியச் செயலாளா்கள் அயோத்தியாப்பட்டணம் தெற்கு ராஜசேகரன், பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு டி.மோகன், தெற்கு முருகேசன் மற்றும் தலைமைக் கழகப் பேச்சாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT