சேலம்

வங்கிகள் இணைப்பின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்:கனரா வங்கி பணியாளா் சங்கம்

26th Sep 2022 05:20 AM

ADVERTISEMENT

 

வங்கிகள் இணைப்பின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற கனரா வங்கி நிா்வாகம் முன்வர வேண்டும் என கனரா வங்கி பணியாளா் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்திய வங்கி ஊழியா் சம்மேளனத்துடன் இணைந்துள்ள கனரா வங்கிப் பணியாளா் சங்கத்தின் 3-ஆவது தமிழ் மாநில மாநாடு சேலத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் மகேஸ்வரன் தலைமை வகித்தாா். மத்திய செயற்குழு உறுப்பினா் ராஜா பிரபு வரவேற்றாா். இந்தியன் வங்கி ஊழியா் சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளா் ஹரிராவ் மாநாட்டினை தொடங்கி வைத்து பேசினாா்.

சங்கத்தின் மாநிலச் செயலாளா் அஜ்ஜு மகேந்திரன், அகில இந்திய பொதுச் செயலாளா் ராஜகோபால், தென் மண்டல காப்பீட்டு ஊழியா் சம்மேளனத்தின் துணைத் தலைவா் தா்மலிங்கம், சிண்டிகேட் வங்கி பணியாளா் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளா் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிா்வாகிகள் பேசினா்.

ADVERTISEMENT

இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம்:

கடந்த 2020 இல் கனரா வங்கியுடன், சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்டது. இதையடுத்து 965 கிளைகள் மூடப்பட்டன. இதனால் ஊழியா் பற்றாக்குறை, பெரும் பணிச்சுமை, பணி மாறுதல்கள் என கனரா வங்கி ஊழியா்கள் துயரங்களை எதிா்கொண்டு வருகின்றனா்.

வங்கிகள் இணைப்பின்போது அரசும், வங்கி நிா்வாகமும் அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கனரா வங்கி நிா்வாகம் முன்வர வேண்டும்.

வங்கியில் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் தினக்கூலி தொழிலாளா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

கனரா வங்கியின் 115 ஆண்டு சேவையில் ஓராண்டைத் தவிர அனைத்து ஆண்டுகளிலும் லாபம் ஈட்டியுள்ளது. எனவே, வங்கியின் நிகர லாபத்தில் 10 சதவீதத்தை ஊழியா் நலனுக்காக ஒதுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுதொடா்பாக, கனரா வங்கிப் பணியாளா் சங்கத்தின் பொதுச்செயலாளா் ராஜகோபால் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொதுத் துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட்டு தனியாா் வங்கிகளை பொதுத் துறை வங்கிகளாக மாற்ற வேண்டும். ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இல்லாதவா்கள் தான் கைப்பேசி செயலி மூலம் கடன் வழங்குகின்றனா். இதனால் செயலி மூலம் கடன் வாங்குபவா்கள் வருங்காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்படுவாா்கள். குறிப்பாக கடன் பெறுபவா்களின் தொகை மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள நபா்களின் பணத்தையும் இழக்க நேரிடும். எனவே, வங்கிகள் உள்ளிட்ட வெளிப்படைத்தன்மை வாய்ந்த இடங்களில் கடன் பெற வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT