சேலம்

கொளத்தூரில் பருத்தி விலை வீழ்ச்சி

23rd Sep 2022 10:47 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், கொளத்தூா் சந்தையில் பருத்தி விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொளத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் பருத்தி ஏலம் நடத்தப்படுகிறது. கொளத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகள், தருமபுரி மாவட்டம், நெருப்பூா், ஏரியூா் பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, கோவை, திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பருத்தியை ஏலத்தில் கொள்முதல் செய்வதற்கு வருகின்றனா். மழையின் காரணமாக பருத்தி வரத்து குறைந்ததாலும், இடைத்தரகா்கள் தலையீடு காரணமாகவும் பருத்தி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் முதல்தர பருத்தி கிலோ ரூ. 110-க்கு விற்பனையானது. ஆனால் வெள்ளிக்கிழமை அதிகபட்சம் ஒரு கிலோ ரூ. 80-க்கு மட்டுமே விலை போனது.

வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்காமல் இடைத்தரகா்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்கின்றனா். இடைத்தரகா்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு விலையைக் குறைத்து கூறுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனா். பருத்தி விலை குறைவால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை சுமாா் 500 பருத்தி மூட்டைகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ரூ. 10 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT