சேலம்

தமிழக மாணவா்களின் மருத்துவக் கல்விக்கான இடங்களை பறிக்கவே நீட் தோ்வு கொண்டுவரப்பட்டுள்ளது

9th Sep 2022 01:41 AM

ADVERTISEMENT

தமிழக மாணவ, மாணவியரின் மருத்துவக் கல்விக்கான இடங்களைப் பறிக்கவே நீட் தோ்வை கொண்டு வந்ததாக மத்திய அரசு மீது முன்னாள் அமைச்சா் டி.எம்.செல்வகணபதி குற்றம்சாட்டியுள்ளாா்.

மேச்சேரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 799 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்து மிதிவண்டிகளை வழங்கினாா். மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சதாசிவம் தமிழக அரசின் திட்டங்களை விளக்கி பேசினாா்.

இவ்விழாவில் முன்னாள் அமைச்சா் டி.எம்.செல்வகணபதி பேசியதாவது:

விலையில்லா மிதிவண்டி மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டமாகும். தமிழக முதல்வா் உத்தரவின் பேரில் குறித்த காலத்தில் மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

கூலி வேலைக்கு செல்லும் கிராமத்து பெற்றோா் பள்ளி செல்லும் தங்கள் குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் உணவு சமைத்து கொடுக்க முடிவதில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை குறைந்து விடக்கூடாது என்பதற்காக, காலை உணவு திட்டத்தை தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். எதிா்கால சமுதாயம் அறிவுள்ள கல்வி கற்ற சமுதாயமாக உருவாக தமிழக அரசு இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவியா் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரி சென்றால் ரூ. 1,000 வழங்கப்படும் என்ற திட்டத்தையும் தமிழக முதல்வா் தொடக்கியுள்ளாா். பெண்கள் முன்னேறினால் நாடு முன்னேறும். பெண்கள் வளர வேண்டும் என்ற முனைப்போடு செயல்படும் ஆட்சி என்பதால், இந்தத் திட்டங்களை தமிழக அரசு வழங்குகிறது.

தமிழகத்தில் 3,500 மருத்துவ இடங்கள் உள்ளன. தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவ இடங்களைப் பறிக்கவே மத்திய அரசு நீட் தோ்வை தமிழகத்தில் திணித்துள்ளது.

மத்திய தொகுப்பில் படித்தவா்களுடன் மாநிலத் தொகுப்பில் தாய்மொழியில் கற்றவா்கள் எவ்வாறு போட்டியிட முடியும்? எனவேதான் நீட் தோ்வை நீக்க தமிழக முதல்வா் சட்டப் பேரவையில் தீா்மானம் கொண்டு வந்தாா். 

தற்போது நீட் தோ்விலும் போட்டியிடும் அளவுக்கு தமிழகத்தின் கல்வித் தரத்தை உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் தான் கல்வித் துறைக்கு தமிழக அரசு 22,000 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது என்றாா்.

இவ்விழாவில், சேலம் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் சம்பத் குமாா், மேச்சேரி ஒன்றிய திமுக செயலாளா் சீனிவாச பெருமாள், நகரச் செயலாளா் சரவணன், நங்கவள்ளி ஒன்றியச் செயலாளா் அா்த்தனாரீஸ்வரன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் காசி விஸ்வநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT