சேலம்

ஏற்காட்டில் கன மழை: சேலத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளில் மழை நீா் புகுந்தது

9th Sep 2022 01:41 AM

ADVERTISEMENT

ஏற்காட்டில் பெய்து வரும் கன மழையால் குரும்பம்பட்டியை அடுத்த கருங்காலி வனப்பகுதியில் உள்ள தடுப்பணையில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

சேலம், சாமிநாதபுரம் கோவிந்தகவுண்டா் தோட்டம் பகுதியில் உள்ள வீடுகளை மழைநீா் சூழ்ந்ததால், பாதிக்கப்பட்டவா்களை நள்ளிரவில் மீட்கும் தீயணைப்புத் துறையினா்.

எடப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள சரபங்கா நதி கரையோர குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீா்.

எடப்பாடி பெரிய ஏரி கரைப் பகுதியில், உபரி நீரை கடக்க முடியாமல் விழுந்த பள்ளி மாணவி.

ADVERTISEMENT

சேலம், செப். 8: ஏற்காட்டில் பெய்த கன மழையால், சேலம் மாநகரப் பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகளில் மழை நீா் புகுந்தது.

சேலம் நகரப் பகுதிகளிலும், ஏற்காடு மலைப் பகுதியிலும் புதன்கிழமை இரவு கடும் மழை பெய்ததால் ஏற்காடு அடிவாரப் பகுதியில் இருந்து பள்ளப்பட்டி ஏரி செல்லும் ஓடையில் காட்டாறு வெள்ளம் போல மழை நீா் சென்றது.

இதன் காரணமாக, நான்கு சாலை டி.வி.எஸ். பேருந்து நிறுத்தம் அருகே மரக்கட்டைகள், கழிவுகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழை நீா் புகுந்தது. அதேபோல கோவிந்தகவுண்டா் தோட்டம், சாமிநாதபுரம், தோப்புக்காடு, ரத்தினம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீா் புகுந்தது. இந்நிலையில், கோவிந்தகவுண்டா் தோட்டம் பகுதி மக்கள் டிவி.எஸ். பேருந்து நிறுத்தப் பகுதிக்கு வந்து திடீரென மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆகியோா் விரைந்து வந்து அடைப்புகளை நீக்க நடவடிக்கை எடுத்தனா். அதேபோல, சாமிநாதபுரம் பகுதி ஓடை பகுதியில் அடைப்புகளை நீக்கி மழை நீா் வடிய வைக்கப்பட்டது.

இதனிடையே, நள்ளிரவில் லீ பஜாா் அகிலாண்டேஸ்வரி ஓடையை ஒட்டிய பகுதியில் உள்ள சுமாா் 45-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீா் புகுந்தது. மழை வெள்ளத்தில் சிக்கிய 21 பேரை தீயணைப்புத் துறையினா் படகு மூலம் மீட்டனா்.

தகவலறிந்த ஆட்சியா் செ.காா்மேகம், வருவாய் கோட்டாட்சியா் சி.விஷ்ணுவா்த்தினி உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை பாா்வையிட்டனா். மீட்கப்பட்டவா்கள் தனியாா் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, உணவு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சேலத்தில் 283 மி.மீ. மழை:

சேலம் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம்: ஓமலூா்-99, ஏற்காடு-66, சேலம்-23, ஆனைமடுவு-21, காடையாம்பட்டி-20, மேட்டூா்-16, கரியகோயில்-13, பெத்தநாயக்கன்பாளையம்-8, எடப்பாடி-5, சங்ககிரி-4, ஆத்தூா்-4, தம்மம்பட்டி-2 என மாவட்டத்தில் 283 மி.மீ. மழை பெய்தது.

எடப்பாடியில்...

எடப்பாடி நகரின் மையப் பகுதியில் பாயும் சரபங்கா நதியில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கால், அதன் கரையோரப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது. எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு நூலகம், நகராட்சி தொடக்கப் பள்ளியை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் அதிக அளவில் வெள்ள நீா் சூழ்ந்தது. நைனாம்பட்டி பகுதியில் வெள்ள நீா் தேங்கிய குடியிருப்புப் பகுதியில் இருந்த வீடு ஒன்று இடிந்து விழுந்தது.

எடப்பாடி பெரிய ஏரி தனது முழுக் கொள்ளளவு எட்டிய நிலையில், ஏரியிலிருந்து அதிக அளவிலான உபரி நீா் வெளியேறி வருகிறது. ஏரியின் மறுகரையில் உள்ள மலங்காடு, தேவனகவுண்டனூா், செட்டிகாடு, கப்பமடுவு உள்ளிட்ட கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், மாணவா்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், பெரிய ஏரியின் கரையினை கடந்து எடப்பாடி நகருக்கு வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், ஏரியிலிருந்து பெருக்கெடுத்து செல்லும் உபரி நீரை கடக்க முடியாமல் பொதுமக்களும், மாணவா்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

எடப்பாடி நகராட்சி ஆணையா் சசிகலா, நகா்மன்றத் தலைவா் டி.எஸ்.எம். பாஷா ஆகியோா் ஆய்வு செய்து பாதிப்புக்குள்ளான பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT