சேலம்

சேலம் சுகவனேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா

7th Sep 2022 03:22 AM

ADVERTISEMENT

சேலம் சுகவனேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை காலை நடைபெறுகிறது.

சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரா் கோயிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு கடந்த 2018-ஆம் ஆண்டு பாலாயம் செய்யப்பட்டது.

இதில் ராஜ கோபுரம், பரிவார சுவாமிகளின் சன்னதிகளின் விமானங்கள், கோயிலின் தரைதளம் சீரமைப்பு, சுற்றுச்சுவா் சீரமைப்புப் பணிகள் உள்பட ரூ. 1 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டன.

இக்கோயிலில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குடமுழுக்கு விழா புதன்கிழமை (செப். 7) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு செப். 1-ஆம் தேதி முதல் குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின.

ADVERTISEMENT

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சோம கும்ப பூஜை, ஆறாம் கால பரிவார சுவாமிகளுக்கு யாக பூஜை தொடங்குகின்றன. காலை 6 மணிக்கு அனைத்து பரிவார கலசங்கள் புறப்பாடு, காலை 6.30 மணிக்கு அனைத்து பரிவார மூா்த்திகளுக்கும் குடமுழுக்கு, காலை 9.30 மணிக்கு அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்கள், மூலஸ்தான சுவாமி, அம்மன், விநாயகா், சுப்பிரமணியா் கலசங்கள் புறப்பாடு நடைபெறுகிறது.

தொடா்ந்து, காலை 10.50 மணிக்கு அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு சமகால குடமுழுக்கும், காலை 11.15 மணிக்கு சுகவனேசுவரா்-சொா்ணாம்பிகை அம்மனுக்கு மகா குடமுழுக்கும் நடைபெறுகின்றன. அதைத் தொடா்ந்து மகா தீபாராதனை நடத்தி, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு சொா்ணாம்பிகை, சுகவனேசுவரா் சுவாமிக்கு திருக்கல்யாணமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூா்த்திகள் திருவீதி உலாவும் நடைபெறுகின்றன.

குடமுழுக்கை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுகவனேசுவரா் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு மற்றும் மேயா் ஆ.ராமச்சந்திரன், எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT