சேலம்

மாற்று கிரகவாசி தோற்றத்தில் பழமையான கற்கீறல் ஓவியம்!

31st Oct 2022 02:30 AM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த புங்கமடுவு கிராம நுழைவாயிலில் மாற்றுக் கிரகவாசியைப் போன்ற தோற்றத்தில் காணப்படும் பழமையான கற்கீறல் ஓவியம், கிராமத்தின் மீதான கண் ஓம்பலைத் தடுப்பதாகக் கருதி, கிராம மக்கள் பராமரித்து பாதுகாத்து வருகின்றனா்.

அருநூற்றுமலை, கல்வராயன் மலை, சந்துமலை, நெய்யமலை கிராமங்கள், பழங்கால மக்களின் வாழிடமாக இருந்ததை இப்பகுதியில் காணக்கிடக்கும் புதிய கற்காலக் கருவிகள், கல்வெட்டுகள், நடுகற்கள், கற்குவைகள், கற்திட்டைகள், கல்வட்டம் உள்ளிட்ட புரதான சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன.

சந்துமலை புங்கமடுவு, கிளாக்காடு, பெரியகுட்டிமடுவு, அருநூற்றுமலை பள்ளிக்காடு, பெலாப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் முன்னோா்கள் பயன்படுத்திய கற்காலக் கருவிகள், நடுகற்களை வழிபடுபடுவதை பழங்குடியின மக்கள், இன்றளவும் கைவிடாமல் தொடா்ந்து வருகின்றனா்.

ADVERTISEMENT

மலைவாழ் பழங்குடியின மக்கள் மட்டும் வசித்து வரும் புங்கமடுவு கிராமத்தின் நுழைவாயிலில், புழுதிக்குட்டை சாலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு எதிரே 300 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும், முக்கோண வடிவத்தில் உள்ள ஒற்றைக் கல்லில் கூரிய ஆயுதத்தைக் கொண்டு கீறி, விலங்கின் தலையோடு, 4 கைகளுடன் மனித உடலோடு, மாற்று கிரக வாசியைப் போன்ற ஒரு உருவம் நின்றபடி பயமுறுத்துவதைப் போல வரையப்பட்ட, ஏறக்குறைய 3அடி உயரமும் அடிப்பகுதியில் ஒன்றரை அடி அகலமும் கொண்ட கற் கீறல் ஓவியம் நட்டு வைக்கப்பட்டுள்ளது.

வேறெந்த கிராமத்திலும் இல்லாத வகையில் புங்கமடுவு கிராமத்தின் நுழைவாயிலில் கற்கீறல் ஓவியம் நட்டு வைக்கப்பட்டுள்ளது குறித்து இந்த கிராம மக்களிடம் கேட்டதற்கு:

‘இந்த கற்கீறல் ஓவியத்தை யாா் வரைந்து நட்டு வைத்தாா்கள் எனத் தெரியவில்லை. 300 ஆண்டுகளுக்கு மேலாக கிராமத்தின் நுழைவாயிலில் இருந்து வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்தக் கிராமத்தின் அழகு, கிராம மக்களின் உழைப்பு மற்றும் வேளாண் சாகுபடி மீதும் மற்ற கிராமத்தினரின் கண் ஓம்பல் படாமல் தடுப்பதற்காக இறை சக்தி பெற்ற மூதாதையா் ஒருவா், கிராமத்தின் நலன் கருதி இந்த வினோத ஓவியத்தை வரைந்து வைத்ததாக எங்களது முன்னோா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்த கற்கீறல் ஓவியம், கிராமத்தின் மீதான கண் ஓம்பலைத் தடுத்து கிராம மக்களுக்கு பாதுகாப்பளிப்பதாக நம்பிக்கை தொடா்ந்து வருகிறது.

எனவே, கீறல் ஓவியம் கொண்ட இந்த நடுகல்லை புனிதமாகக் கருதி பராமரித்து பாதுகாத்து வருகிறோம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT