சேலம்

பயிா்களை காக்கும் பழைய வேட்டி, சேலைகள்

31st Oct 2022 02:32 AM

ADVERTISEMENT

 

வாழப்பாடி பகுதியில், பறவைகள், விலங்குகளிடம் இருந்து பயிா்களை பாதுகாக்க, வயல்வெளிகளைச் சுற்றி, பழைய வேட்டி, சேலைகளை பயன்படுத்தி, எவ்வித செலவுமின்றி விவசாயிகள் வேலி அமைப்பது அதிகரித்து வருகிறது.

அண்மைக்காலமாக வனப்பகுதியை யொட்டியுள்ள கிராமங்களில் மட்டுமின்றி, அனைத்து கிராமங்களிலும் மயில், மைனா, சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட பறவைகள், குரங்கு, மான், காட்டுபன்றி, முயல், சாரைப்பாம்பு, குள்ளநரி உள்ளிட்ட விலங்குகள், விளைநிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவது அதிகரித்து வருகிறது.

பயிரிட்டுள்ள வயல்களைச்சுற்றி வேலி அமைத்து, பறவைகள், விலங்குகளிடம் இருந்து பயிா்களை பாதுகாக்க, புதிய உத்தியை வாழப்பாடி பகுதி விவசாயிகள் தற்போது அதிகளவில் கையாண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

வயல்வெளிகளைச்சுற்றி சிறிய மரக் குச்சிகளை நட்டு, வீட்டில் பயன்பாடற்று கிடக்கும் பழைய வேட்டி, சேலைகளை கட்டி வேலி அமைத்து வருகின்றனா். பல வண்ணங்களில் வித்தியாசமாகக் காணப்படும் இந்த வேட்டி சேலை வேலியை கண்டு மிரண்டு போகும் பறவைகளும், விலங்குகளும், வயலுக்குள் செல்லாமல் திரும்பி விடுகின்றன. இந்த உத்தியை கையாளும் விவசாயிகளின் எண்ணிக்கை வாழப்பாடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் சிலா் கூறியதாவது:

காற்று வீசும் திசைக்கும், வேகத்திற்கும் ஏற்ப ஒருவிதமான சத்தத்துடன் பல வண்ணத்தில் வேட்டி சேலைகள் அசைந்தபடி இருப்பதால், இந்த வேலியை அமைக்கப்பட்டுள்ள வயல்களில் பறவைகளும், விலங்குகளும் புகுவதற்கு தயங்குகின்றன.

எனவே, பயன்பாடின்றி வீட்டில் கிடக்கும் பழைய வேட்டி, சேலைகளை பயன்படுத்தி, வயல்களுக்கு வேலி அமைத்து பயிா்களை பாதுகாத்து வருகிறோம் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT