சேலம்

சமையல் எரிவாயுவை பாதுகாப்பாக கையாளுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: சேலம் ஆட்சியா்

19th Oct 2022 02:34 AM

ADVERTISEMENT

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளைகளை பாதுகாப்பாக கையாளுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியா் செ.காா்மேகம் அறிவுரை வழங்கினாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், எரிவாயு முகவா்கள், அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்சியா் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டத்தில் வீடுகளுக்கான சமையல் எரிவாயு இணைப்புகள் சுமாா் 9.50 லட்சம் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு உருளைகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த எரிவாயு முகவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிவாயுவை பாதுகாப்புடன் கையாள்வது குறித்து துண்டுப் பிரசுரங்களை சமையல் எரிவாயு உருளைகளில் ஒட்டி வீடுகளுக்கு வழங்க வேண்டும், எரிவாயு உருளைகள் இருக்கும் பகுதி காற்றோட்டமாக இருக்க வேண்டும், உருளைகளைப் படுக்கை நிலையில் வைத்து சமைக்காமல், செங்குத்தான நிலையில் வைத்திருக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சமையல் அடுப்பினை, எரிவாயு உருளையை விட உயரமான இடங்களில் வைத்திட வேண்டும், அடுப்பு உபயோகத்தில் இல்லாதபோது (இரவு நேரங்களில்) ரெகுலேட்டரை கண்டிப்பாக அணைத்து வைக்க வேண்டும், சமைக்கும்போது அடுப்பின் அருகிலேயே இருக்க வேண்டும், காற்று அதிகம் அடிக்கும் இடத்தில் அடுப்பு இருந்தால் அணைந்து எரிவாயு கசிவு ஏற்பட்டு, விபத்துகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடும் என்பது குறித்தும், மிகச்சிறந்த பாதுகாப்பான ஐ.எஸ்.ஐ. தரம் உடைய எரிவாயு உருளைகளின் உதிரி பாகங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுப்பின் அருகில் விளக்கு, ஊது பத்திகளை வைக்கக் கூடாது, எரிவாயு கசிவு ஏற்பட்டிருந்தால் உடனே ரெகுலேட்டரை ஆப் செய்வதுடன், ஜன்னல்கள், கதவுகளைத் திறந்து வைக்க வேண்டும். இத்தருணத்தில் மின்சார ஸ்விட்சுகளை போடவோ, அணைக்கவோ கூடாது. அவசர உதவிக்கு 1906 என்ற எண்ணை அழைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, மாவட்ட வழங்கல் அலுவலா் (பொ) டி.எஸ்.துரைமுருகன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் மண்டல மேலாளா் முகேஷ் ரோஜ்ஷா, அனைத்து எரிவாயு முகவா்கள் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT